வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் 2022ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க கடந்த ஆண்டு கட்டுப்படியான விலையில் கிடைக்கவில்லை என்று புதிய ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
அனைத்துலக லாப நோக்கமற்ற ஆய்வு, கல்வி அமைப்பான நகர நிலக் கழகம் ஆய்வை நடத்தியது.
சராசரி வருடாந்தர குடும்ப வருமானத்துக்கும் சராசரி வீட்டு விலைகளுக்கும் இடையிலான விகிதம் ஐந்துக்குக் குறைவாக இருந்தால் வீட்டு விலைகள் கட்டுப்படியானதாக இருப்பதாகக் கருதப்படுகிறது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் விலை-வருமான விகிதம் கடந்த ஆண்டு 4.3.
ஆசியப் பசிபிக் வட்டாரத்தில் ஆராயப்பட்ட 51 சொத்துச் சந்தைகளில் மூன்று பெருநகரங்களில் உள்ள வீடுகளின் விலை-வருமான விகிதம் ஐந்து அல்லது அதற்கும் குறைவாக இருந்தது.
சிங்கப்பூரில் உள்ள கழக வீடுகள், ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் உள்ள அடுக்குமாடி வீடுகள், மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள அடுக்குமாடி வீடுகள் அந்த விகிதத்தை எட்டின.
2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கழக வீடுகளின் விலை-வருமான விகிதம் கடந்த ஆண்டு அதிகரித்ததாக நகர நிலக் கழக ஆய்வு குறிப்பிட்டது.
கடந்த ஆண்டு 4.3ஆகப் பதிவான அந்த விகிதம், 2022ஆம் ஆண்டு 3.7ஆக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் கட்டப்படும் கழக வீடுகளின் எண்ணிக்கை 1.2 மில்லியனைத் தாண்டியுள்ளபோதும் அண்மை ஆண்டுகளில் மேம்பாடுகள் மெதுவடைந்து கொவிட்-19 காலக்கட்டத்தில் நிலைகுத்தியது என்று ஆய்வு சுட்டியது.
மறுவிற்பனை கழக வீடுகளின் விலைகளும் 2020ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து காலாண்டு அடிப்படையில் அதிகரித்துவருகிறது.
வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகள் முயன்றுவருகின்றனர்.
2021ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டுக்குள் 100,000 தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளை உருவாக்க வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இலக்குக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிலிருந்து 2027ஆம் ஆண்டு வரை 50,000 வீடுகளைக் கழகம் விற்பனைக்கு விடவிருக்கிறது.