‘ஏபெக்’ பொருளியல் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்லும் பிரதமர் வோங்

‘ஏபெக்’ பொருளியல் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்லும் பிரதமர் வோங்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2026 - 8:42 pm

2 mins read

ஷென்சென்: சிங்கப்பூர் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டில் (ஏபெக்) கலந்துகொள்ள சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

சீனாவின் ஷென்சென் மாநிலத்தில் புதன்கிழமை (நவம்பர் 18), வியாழக்கிழமை (நவம்பர் 19) ஆகிய இரண்டு நாள்கள் 33வது ஏபெக் மாநாடு நடைபெறும். அங்கு பிரதமர் வோங் அக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதோடு, சீன அதிபர் ஸி ஜின்பிங்கையும் சந்திப்பார்.

புதன்கிழமை ஷென்சென்னில் தரையிறங்கும் பிரதமர் வோங், சீன அதிபரை சிங்கப்பூரின் பிரதமராக நேரில் சந்திப்பது இதோடு மூன்றாம் முறையாகும்.

மணிலாவில் முடிவடைந்த 49வது தென்கிழக்காசிய நாடுகளின் (ஆசியான்) மாநாட்டில் கலந்துகொண்டபிறகு பிரதமர் அங்கிருந்து சீனா செல்கிறார்.

ஆசியான் மாநாட்டை 2027ல் தலைமையேற்று நடத்தத் தயாராகி வருவதோடு 2030ல் நிகழவுள்ள ஏபெக் மாநாட்டையும் சிங்கப்பூர் ஏற்பாடு செய்யவிருக்கிறது.

ஷென்சென்னிலிருந்து ஏபெக் மாநாடு முடிந்து, நவம்பர் 20, 21 ஆகிய இரு தேதிகளில் அவர் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கும் வருகை தருகிறார். அங்கு சீனப் பிரதமர் லீ ஷியாங்கைச் சந்தித்து அதிகாரபூர்வ பணிகள் சார்ந்த கருத்துரையாடலுடன் மதிய விருந்தில் கலந்துகொள்கிறார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் அமைச்சரவை உறுப்பினருமாகிய இன் லீயையும் அவர் பெய்ஜிங்கில் சந்திப்பார்.

இந்த நான்குநாள் சீனப் பயணம், அந்நாட்டுடன் ஒத்துழைப்பை ஆழமாக்கவும், அதிகரித்துவரும் வட்டார பதற்றத்துக்கும் பிளவுபட்டுள்ள வர்த்தகக் கட்டமைப்புக்கும் இடையே பொருளியல் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.

அதன் விவரங்களை பிரதமர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியது.

ஏபெக் மாநாட்டில், பல நாடுகளின் தலைவர்கள் வட்டார பொருளியல் ஒருங்கிணைப்பு, இணைப்புத் தன்மை, புத்தாக்கத்தை அரவணைத்தல், மின்னிலக்க உருமாற்றம் ஆகியவற்றோடு நிலைத்தன்மையான அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல் போன்ற அம்சங்களை ஆராயவுள்ளனர் எனவும் அலுவலகம் அதன் அறிக்கையில் விளக்கியது.

குறிப்புச் சொற்கள்