பூனைகளைக் கொன்றவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு

1 mins read
673366ae-2f03-451d-9a4e-418b68a4f8c6
பேரி லின் பெங்லி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) சிறைத் தண்டனையைத் தொடங்கினார். - படம்: பெரித்தா ஹரியான்

ஐந்து பூனைகளைக் கொடுமைப்படுத்தி, வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளின் மேல் தளங்களிலிருந்து அவற்றில் இரு பூனைகளை வீசிக் கொன்ற ஆடவருக்கு 14 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அரசாங்க வழக்கறிஞர்கள் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்கின்றனர்.

பேரி லின் பெங்லி, 32, என்ற இந்த ஆடவருக்கு 24 மாதச் சிறைத் தண்டனை விதிக்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டு இருந்தனர். சிங்கப்பூரிலேயே ஆக மோசமான விலங்கு வதைகளில் இதுவும் ஒன்று என அவர்கள் கூறியிருந்தனர்.

லின்னுக்கு மனச்சோர்வு இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு பிப்ரவரி 7ஆம் தேதி சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

லின்னின் செயல்கள் அருவருப்பானவை என்று துணை முதன்மை மாவட்ட நீதிபதி கெஸ்லர் சோ வர்ணித்தார். பூனைகளுக்கு தேவையின்றி வலியை ஏற்படுத்தி அவற்றை லின் கொன்றதை அவர் சுட்டினார்.

ஆனாலும், அரசாங்க வழக்கறிஞர்கள் கோரிய 24 மாதச் சிறைத் தண்டனை ‘மிகுதியானது’ என நீதிபதி கருதினார்.

இந்நிலையில், லிம்முக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அரசாங்க, தற்காப்பு வழக்கறிஞர்கள் இருதரப்பினரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) மேல்முறையீடு செய்தனர்.

அரசாங்க வழக்கறிஞர்களின் மேல்முறையீட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக தற்காப்புத் தரப்பின் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதாக லின்னின் வழக்கறிஞர் அஸ்ரி டான் நீதிமன்றத்தில் கூறினார்.

மேல்முறையீடுகளின் முடிவு வெளிவருவது ஒருபுறமிருக்க, லின் செவ்வாய்க்கிழமை சிறைத் தண்டனையைத் தொடங்கினார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஓராண்டு காலத்துக்கு எந்தவொரு விலங்கையும் வைத்திருக்க அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்