அடையாள அரசியலை நிராகரிக்கும்படி அனைத்துக் கட்சிகளுக்கும் வேண்டுகோள்

2 mins read
6e7c59e7-fe3e-43dc-8155-dedc996e6332
இன, சமய அடிப்படையில் வேட்பாளர்கள் ஆதரவு கேட்பதும் சில பிரிவுகளின் நலன்களை மற்றவற்றைக் காட்டிலும் உயர்த்திப் பேசுவதும் அடையாள அரசியலாகும் என்றார் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமயத்தை அரசியலுடன் கலப்பது சிங்கப்பூரில் ஏற்றுக்கொள்ளப்படாது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அடையாளம் சார்ந்த அரசியலைச் சிங்கப்பூரர்கள் உறுதியுடன் நிராகரித்து இனத்தையும் சமயத்தையும் அரசியலுக்குள் புகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிங்கப்பூரில் மே 3ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதுகுறித்த தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும்படி எல்லா அரசியல் கட்சிகளையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது கட்சியையோ கட்சி அரசியலையோ சார்ந்த வேறுபாடுகள் பற்றியதன்று எனத் திரு வோங், தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சில் சனிக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார்.

கடந்த சில நாள்களில், சமய அடிப்படையில் சிங்கப்பூரர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் வெளிநாட்டுத் தரப்புகளின் நடவடிக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து அந்தச் சந்திப்பின்போது விளக்கமளித்தார்.

இன, சமய அடிப்படையில் வேட்பாளர்கள் ஆதரவு கேட்பதும் சில பிரிவுகளின் நலன்களை மற்றவற்றைக் காட்டியும் உயர்த்திப் பேசுவதும் அடையாள அரசியலாகும் என்று பிரதமர் விளக்கினார்.

அடிப்படையான இரண்டு கொள்கைகள் குறித்து தங்கள் நிலைப்பாட்டை விளக்கும்படி கட்சித் தலைவர்களை திரு வோங் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூரில் அடையாள அரசியலுக்கு இடமில்லை என்பது முதல் கொள்கை. அரசியலும் சமயமும் கலவாதிருக்கவேண்டும் என்பது இன்னொரு கொள்கை.

அடையாள அரசியலை ஏற்பதால் மேலும் பிளவுகள் ஏற்படும் என்ற திரு வோங், அதனால் சிங்கப்பூரர்கள் அனைவரும் பாதிக்கப்படுவர் என்றும் சொன்னார்.

“இது ஆபத்தானது. தனது அடையாளத்தை நிலைநாட்ட ஒரு குழு முரட்டுத்தனமாகத் தள்ளுமுள்ளில் ஈடுபடும்போது, மற்ற குழுக்களும் பதிலுக்கு அவ்வாறு செய்யும்,” என்றார் அவர்.

“மற்ற நாடுகளில் இதன் விளைவுகளை உங்களால் காண முடியும். வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் பகை, பழி, தீய எண்ணப்போக்குகள் மூட்டப்படுகின்றன. இதனால் யாரும் வெல்லப்போவதில்லை,” என்று பிரதமர் கூறினார்.

இந்த அணுகுமுறையால் சிறுபான்மைக் குழுக்கள், தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெற தவறுவர் என்று கூறினார் திரு வோங்.

“பதிலுக்கு, பெரும்பான்மைக் குழுவினர் வலுவான நடவடிக்கைகளை எடுப்பர். இதனால் சிறுபான்மையினருக்கான இடமும் குறுகிவிடும்,” என்று அவர் கூறினார்

“எல்லா அரசியல் கட்சிகளுக்குமான என் அழைப்பு இதுதான் கட்டுப்பாடுகளைத் தகர்க்காமல், நாம் இயன்றவரை முயல்வோம். அரசியலுக்குள் இனத்தையும் சமயத்தையும் கொண்டுவர வேண்டாம், ”என்று அவர் கூறினார்.

“சிங்கப்பூரர்கள் தங்கள் தொகுதிக்காகவும் அரசாங்கத்திற்காகவும் தாங்கள் விரும்பும் கட்சிகளைத் தேர்ந்தெடுக்கட்டும். ஆனால், இந்த விவகாரம் நம்மை, குறிப்பாக தேர்தல் பிரசார நேரத்தில், பிளவுபடுத்த அனுமதிக்கக்கூடாது,” என்றும் பிரதமர் வோங் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்