அரசதந்திரப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் பயணப் பெட்டி சலுகை தொடர்பாக அரசாங்க ஊழியரிடம் பொய்த் தகவல் அளித்த வெளியுறவு அமைச்சின் தலைமை இயக்குநர் திங்கட்கிழமை (பிப்ரவரி 10) ஒரு வாரச் சிறைத் தண்டனையைத் தொடங்கினார்.
தண்டனையை எதிர்த்து கில்பர்ட் ஓ ஹின் குவான், 46, செய்த மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
அரசாங்க வழக்கறிஞர்களும் ஓவின் தற்காப்பு வழக்கறிஞரும் அவருக்கு அபராதம் விதிக்குமாறு நீதிமன்றத்தில் வலியுறுத்தியபோதும், மாவட்ட நீதிபதி 2024 மே மாதம் அவருக்கு ஒரு வாரச் சிறைத் தண்டனை விதித்திருந்தார்.
அரசாங்க வழக்கறிஞர்கள் $6,000க்கும் $9,000க்கும் இடைப்பட்ட அபராதம் விதிக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஓவின் முன்னைய வழக்கறிஞர்கள் $5,000க்கும் குறைவான அபராதம் விதிக்குமாறு கோரியிருந்தனர்.
பின்னர், சிறைத் தண்டனையை எதிர்த்து ஓ மேல்முறையீடு செய்திருந்தார்.
2024 அக்டோபரில் நடந்த மேல்முறையீட்டு விசாரணையின்போது, அரசாங்க ஊழியரிடம் பொய்த் தகவல் அளித்த குற்றத்தை தம் கட்சிக்காரர் ஒப்புக்கொண்டால், அவருக்கு அபராதம் விதிக்கும்படி அரசாங்க வழக்கறிஞர்கள் கேட்டுக்கொள்வது குறித்து உடன்பாடு இருந்ததாக தற்காப்பு வழக்கறிஞர் டான் சீ மெங் கூறியிருந்தார்.
மேல்முறையீட்டுக்காக அரசாங்க வழக்கறிஞர்கள் எதற்காக அவர்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ஒரு வாரச் சிறைத் தண்டனையை நிலைநாட்ட நாடினர் என வழக்கறிஞர் டான் வினவினார்.
‘சட்டப்படி சரியான, நியாயமாக தற்காக்கக்கூடிய’ நீதிமன்ற முடிவைத் தற்காப்பதில் அரசாங்க வழக்கறிஞர்கள் தடுக்கப்படவில்லை என அரசாங்க வழக்கறிஞர் டான் பெய் வெய் வாதிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஓவின் குற்றத்துக்கு அபராதம் விதிப்பது பொருத்தமாக இருக்காது என 2024 மே மாதம் மாவட்ட நீதிபதி ஷர்மிளா ஸ்ரீபதி ஷாநாஸ் தமது தீர்ப்பில் விளக்கியிருந்தார்.