ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் சக பள்ளி மாணவர் ஒருவரை 2021ஆம் ஆண்டு கோடரியைக் கொண்டு தாக்கிக் கொன்ற இளையர், தமது தண்டனைக் காலத்தைக் குறைக்குமாறு மேல்முறையீடு செய்ததை அடுத்து, அந்தத் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
எட்டு முதல் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை கோரிய இளையரின் மேல்முறையீட்டை, சிங்கப்பூரின் ஆக உயரிய நீதிமன்றம் நிராகரித்தது.
இளையர் குற்றம்புரிந்தபோது அவருக்கு 16 வயது என்பதால் சிறுவர் மற்றும் இளம் வயதினர் சட்டத்தின் கீழ் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. தொடக்கத்தில் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கினார் இளையர்.
கொலை செய்த சமயத்தில் பெரும் மனச்சோர்வு நிலையில் இளையர் இருந்துள்ளார் என்பது கண்டறியப்பட்ட பின்னர், நோக்கமில்லா மரணம் விளைவித்தது எனக் குற்றச்சாட்டு குறைக்கப்பட்டது.
அதையடுத்து, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி இளையர் தம் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் உயர் நீதிமன்றம் அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இளையரின் மனநலப் பிரச்சினையின் தீவிரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் மிக அதிக கால சிறைத் தண்டனையை உயர் நீதிமன்ற நீதிபதி விதித்ததாக ஜூலை 1ஆம் தேதி இளையரின் மேல்முறையீட்டின்போது அவரின் வழக்கறிஞர் வாதாடினார்.
மனச்சோர்வின் பிடியில் பெரிதும் சிக்கியிருந்தபோது தமது கட்சிக்காரர் இந்தத் திட்டத்தைத் தீட்டியிருந்தார் என்று திரு சுனில் சுதீசன் கூறினார். அதனால், இளையரின் குற்றம் அந்தக் கண்ணோட்டத்தில் அளவிடப்பட வேண்டும் என்றார்.
பள்ளியில் உள்ளோரை வெட்டத் திட்டமிட்டிருந்த அந்த இளையர், தம்மைக் காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவர் 2021ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடரி உள்பட பல ஆயுதங்களை வாங்கினார்.
கோடரியுடன் ஜூலை 19ஆம் தேதி தமது வகுப்பறையை விட்டு வெளியேறி கழிவறையில் காத்திருந்த இளையர், 13 வயது ஈத்தன் ஹன் என்ற மாணவரைப் பலமுறை வெட்டிக் கொன்றார்.