மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளிடமிருந்து எதிர்பாரா விதமாக வரும் ‘பாப்-அப்’ குறிப்பு மோசடிச் செயலாக இருக்கக்கூடும்.
ஆப்பிள் என்று கூறிக்கொண்டு மேற்கொள்ளப்படும் ஆள்மாறாட்ட மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் இரு வாரங்களில் கிட்டத்தட்ட 200,000 வெள்ளி மதிப்பிலான மின்னிலக்க நாணயச் சொத்துகளை இழந்தனர்.
இம்மாதம் 7ஆம் தேதியிலிருந்து அதுபோன்ற குறைந்தது ஐந்து மோசடிச் சம்பவங்கள் குறித்துப் புகார் வந்ததாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) அறிக்கை மூலம் தெரிவித்தது. அவற்றில் குறைந்தது 195,000 வெள்ளி பறிபோனதாகக் காவல்துறை குறிப்பிட்டது.
ஆப்பிள் பயனர்களின் கணக்குகளை ஊடுருவ முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அவர்களின் ஆப்பிள் கணக்குக்கான கடவுச்சொல்லை மாற்றுமாறும் அவர்களின் கைப்பேசிகளுக்கு மோசடிக்காரர்கள் ‘பாப்-அப்’ குறிப்புகளை அனுப்புவர். இவ்வாறு அந்த வகை மோசடி மேற்கொள்ளப்படுகிறது.
பிறகு ஆப்பிள் ஊழியர்கள் என்று ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபடுவோர் பாதிக்கப்படுவோரிடமிருந்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவர். பாதிக்கப்படுவோர் தங்களின் தனிப்பட்ட விவரங்களை வழங்கி மோசடிக்கு ஆளாவர்.
ஆப்பிள் பயனர்களைக் குறிவைக்கும் மோசடிகள் அதிகரித்துவருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. ஐமெசேஜ் தளம் சம்பந்தப்பட்ட அதுபோன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 2.2 மில்லியன் வெள்ளியை இழந்ததாகவும் காவல்துறை குறிப்பிட்டது.
சந்தேகத்துக்குரிய தொலைபேசி அழைப்புகளைப் பெறுவோர் ஸ்கேம்ஷீல்டை 1799 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அத்தளம் 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்கிறது.
அதேபோல் காவல்துறையிடம் தெரியப்படுத்த 1800-255-0000 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/i-witness என்ற இணைய முகவரிக்குப் போகலாம்.


