பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை விடுவிக்க விண்ணப்பம்; சிங்கப்பூர் நீதிமன்றம் நிராகரிப்பு

1 mins read
85a632fd-6caf-4de8-b7e2-cae07205e38a
சென் சிக்கு எதிராகப் பிரிட்டனும் அமெரிக்காவும் பல தடைகளை விதித்துள்ளன. - படம்: நோம் பென் போஸ்ட்

கம்போடிய மோசடிப் பேர்வழி எனச் சந்தேகிக்கப்படும் சென் சியின் குடும்ப அலுவலகத்துக்குச் சொந்தமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றை விடுவிக்கக் கோரி அவரது முன்னாள் ஊழியர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.

ஆனால், அவரது விண்ணப்பத்தை ஏற்க அரசு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னுக்குச் சொந்தமான, சிங்கப்பூரை மையமாகக் கொண்டு குடும்ப அலுவலகத்தின் (டிடபிள்யூ கெப்பிட்டல்) முன்னாள் மனிதவளப் பிரிவு மேலாளரான திருவாட்டி இங் பணத்தை விடுவிக்கக் கோரியிருந்தார்.

டிடபிள்யூ கெப்பிட்டலில் எஞ்சியுள்ள ஒரே ஓர் இயக்குநரான கெரன் சென் சுயூலிங்கின் சார்பாக அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

சென் சுயூலிங் வெளிநாட்டில் இருக்கிறார். சிங்கப்பூருக்கு வந்து விசாரணையில் உதவுமாறு அவரிடம் அதிகாரிகள் பலமுறை கேட்டுக்கொண்டும் அவர் அதற்கு உடன்படவில்லை.

டிடபிள்யூ கெப்பிட்டலின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதை அடுத்து, சம்பளம் போன்ற செலவுகளுக்காக $332,000க்கும் அதிகமான தொகையை விடுவிக்க வேண்டும் என்று திருவாட்டி இங் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

செலுத்தப்பட வேண்டிய நிறுவன வரிக்கு $459,000 தேவைப்படுகிறது என்றும் எதிர்காலச் செலவுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ $102,000 வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால், டிடபிள்யூ கெப்பிட்டலின் நிதி தொடர்பாக நம்பகமான முறையில் பேச திருவாட்டி இங்கிற்கு அதிகாரம் உள்ளதா என மாவட்ட நீதிபதி கோக் ஷு என் சந்தேகம் எழுப்பினார்.

திருவாட்டி இங்கின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்