வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் நாடுகளுக்கும் இடையில் ஏற்படும் சச்சரவுகள் குறித்து விசாரிக்க அனைத்துலக அளவில் புதிய தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்படுகிறது. அதைச் சிங்கப்பூரில் அமைப்பதற்கான விருப்பமனுவைத் தாக்கல் செய்யவிருப்பதாகச் சட்ட அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
முதலீடு செய்யும் நாடுகளுக்கு இடையிலான சர்ச்சைகளைத் தீர்த்து வைக்க தற்போதிருக்கும் தற்காலிக நடுவர் அமைப்பிற்குப் பதிலாக, பலதரப்பு முதலீட்டுத் தீர்ப்பாயம் உருவாக்கப்படுகிறது.
அதுகுறித்து, அனைத்துலக வர்த்தகச் சட்டத்துக்கான ஐக்கிய நாட்டு நிறுவன ஆணையத்தின் உறுப்பு நாடுகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன.
ஒப்பந்தங்கள் அடிப்படையில் முதலீடு செய்யும் நாடுகள் தொடர்பான புகார்களும் தற்போதைய நடுவர் அமைப்பின் நிலையற்ற தீர்ப்புகள் குறித்த விமர்சனங்களும் அதிகரித்துவருவதால் நிரந்தரமான தீர்ப்பாயத்துக்கான வேண்டுகோள் வலுத்துள்ளது.
2017ஆம் ஆண்டிலிருந்து புதிய தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பான ஆலோசனைகளை ஆணையத்தின் மூன்றாம் பணிக்குழு கலந்துரையாடிவருகிறது.
இதற்கிடையே, அனைத்துலக வர்த்தகச் சட்டத்துக்கான ஐக்கிய நாட்டு நிறுவன ஆணையத்தின் கல்வி மாநாட்டில் பேசிய டோங், 1987ஆம் ஆண்டிலிருந்து ஒப்பந்தங்கள் அடிப்படையில் முதலீடு செய்த நாடுகளின் வழக்குகளில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவை கடந்த பத்து ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்டுவிட்டன என்றார்.
“இருப்பினும், நிலையற்ற முடிவுகள், அரசாங்கங்களின் ஒழுங்குமுறை முடிவுகள் முடங்கிவிடுமோ என்ற அச்சம், நடுவர்களின் சுதந்திரம் குறித்தும் நடுநிலை குறித்தும் தொடர்ந்து எழும் கேள்விகள் போன்றவற்றால் சர்ச்சைகளைத் தீர்த்து வைப்பதற்கான கட்டமைப்பு கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது,” என்றார் டோங்.
முதலீடு செய்யும் நாடுகளுக்கு இடையே சர்ச்சைகள் எழுவது வழக்கம் என்ற அவர், “அத்தகைய சர்ச்சைகள் அதிகரிக்குமா என்பது கேள்வியல்ல. மாறாக, அவற்றைத் தீர்த்து வைப்பதற்கு நம்பிக்கையான, நேர்மையான அமைப்பு இருக்கிறதா என்பதைத்தான் யோசிக்கவேண்டும்” என்று குறிப்பிட்டார்.


