சிறப்பு உள்வட்ட உறுப்பினர் கூட்டத்தை நடத்த பாட்டாளிக் கட்சிக்கு விண்ணப்பம்

2 mins read
ecb93723-bfc5-4735-a1f7-5b67b8c3f00f
பாட்டாளிக் கட்சி, சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தும்படி உள்வட்ட உறுப்பினர்களின் விண்ணப்பம் குறித்து கலந்துரையாடுவதாகத் தெரிவித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சி, சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தும்படி உள்வட்ட உறுப்பினர்கள் விண்ணப்பம் குறித்து கலந்துரையாடுவதாகத் தெரிவித்துள்ளது.

சிறப்பு உள்வட்ட உறுப்பினர்களுக்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யும்படி விண்ணப்பம் வந்தது குறித்து பாட்டாளிக் கட்சி ஞாயிற்றுக்கிழமை (டிசம் பர் 28) அறிக்கை வெளியிட்டது.

கட்சித் தலைவர் சில்வியா லிம் விண்ணப்பம் செய்த உள்வட்ட உறுப்பினரிடம் பேசிவிட்டதாகவும் கட்சியின் அரசியலமைப்புச் சட்டத்தின் 19 உறுப்பினர்கள் அடங்கிய மத்திய நிர்வாகக் குழு விண்ணப்பம் குறித்து கலந்துரையாடும் என்றும் அறிக்கை சொன்னது.

19 உறுப்பினர்கள் அடங்கிய மத்திய நிர்வாகக் குழுவில் 13 பேர் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

கட்சித் தலைவரோ மத்திய நிர்வாகக் குழுவோ எப்போது வேண்டுமானாலும் சிறப்பு உள்வட்ட உறுப்பினர்களுக்கான கூட்டத்தைக் கூட்டலாம் என்று அக்கட்சியின் இணையத்தளம் குறிப்பிடுகிறது.

உள்வட்ட உறுப்பினர்களில் 10 விழுக்காட்டினர் அல்லது குறைந்தது 20 பேர் ஒப்புக்கொண்டாலும் கூட்டத்தை அறிவிக்கலாம் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

உள்வட்ட உறுப்பினர்களில் 20க்கும் அதிகமானோர் சிறப்புக் கூட்டத்தை பிப்ரவரி மாதத்தில் நடத்தும்படி கடிதம் ஒன்றில் கையெழுத்திட்டு சமர்ப்பித்துள்ளதாகக் கட்சித் தகவல்கள் குறிப்பிட்டன.

இதற்குமுன் பாட்டாளிக் கட்சியின் உள்வட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 100 என்று அறியப்படுகிறது.

சிறப்பு உள்வட்ட உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் உள்வட்ட உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டு வாக்களிக்க முடியும்.

ஈராண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் உள்வட்ட உறுப்பினர்களுக்கான கூட்டத்தைவிட இந்தச் சிறப்புக் கூட்டம் மாறுபட்டது. வழக்கமாக நடைபெறும் உள்வட்ட உறுப்பினர் கூட்டத்தில் மத்திய நிர்வாகக் குழு நியமிக்கப்படும்.

இத்தகைய கூட்டங்கள் நடைபெறுவதற்கு ஒரு மாதம்முன் கட்சியின் தலைமைச் செயலாளர் அனைத்து உள்வட்ட உறுப்பினர்களுக்கு அதுகுறித்த விவரங்களைத் தெரிவிக்கவேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது.

கூட்ட ஒழுங்கு, கூட்டத்தில் விவாதிப்பதற்கு முன்வைக்கப்படும் தீர்மானங்கள் குறித்து கூடுமானவரைத் தலைமை செயலாளர் கூறவேண்டும்.

நாடாளுமன்றக் குழுவிற்கு முன் பொய் சொன்னதாகத் திரு பிரித்தம் சிங்கிற்கு விதிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து நாடாளுமன்றம் ஜனவரியில் பேசவிருப்பதை முன்னிட்டு சிறப்புக் கூட்டத்திற்கான விண்ணப்பம் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
பாட்டாளிக் கட்சிகூட்டம்சிறப்புநாடாளுமன்ற உறுப்பினர்