தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய சமாதான நீதிபதிகள் நியமனம்

2 mins read
ee7ac55c-2296-444f-ae16-ecba706eb980
(வலமிருந்து) சமூகத் தலைவர் கல்யாணி எஸ்.ராமசாமி, தொழிலதிபர் ஜெயக்குமார் நாராயணன் இருவரும் தேசிய கலைக்கூடத்தில் சமாதான நீதிபதிகளாகப் பதவியேற்றுக்கொண்டனர். - படம்: உள்துறை அமைச்சு

அதிபர் தர்மன் சண்முகரத்னத்தால் நியமிக்கப்பட்டுள்ள 76 சமாதான நீதிபதிகளுக்கு வியாழக்கிழமை (செப்டம்பர் 18) பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது.  

தேசிய கலைக்கூடத்தில் அந்த 76 பேரும் அப்பதவிக்கு உறுதி செய்யப்பட்டனர். அவர்களில் 20 பேர், புதிதாகச் சமாதான நீதிபதிகளாகச் செயல்படுகின்றனர். 

உயர் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டஃபர் டான், பதவியேற்பு மற்றும் உறுதிமொழி விழாவைச் சிறப்பித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்டவர்களில், தொழிலதிபரும் சமூகத் தலைவருமான ஜெயக்குமார் நாராயணன், கல்வியாளர் கல்யாணி எஸ்.ராமசாமி, கல்வி அமைச்சின் பள்ளிக் குழுமக் கண்காணிப்பாளர் ரதி பரிமளன், முதலீட்டு நிறுவன இயக்குநர் ஜோஷுவா குமா ஆகியோர் இடம்பெறுகின்றனர். 

2025 செப்டம்பர் 1 தொடங்கி ஐந்தாண்டு காலத்திற்கு இவர்கள் பணியாற்றுவர். 

சமாதான நீதிபதி என்பவர் தமது துறையில் மட்டுமன்றி, பரந்த சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்ததற்காக அங்கீகரிக்கப்பட்ட சிறந்த சிங்கப்பூரர் ஆவர். 

சிறையில் குறிப்பிட்ட சில சேவைகளை ஆற்றுவது, அரசு நீதிமன்றங்களில் தன்னார்வ சமரச நடுவராகப் பணியாற்றுவது, பதிவுத் திருமணங்களை நடத்தி வைப்பது போன்ற கடமைகளைச் சமாதான நீதிபதிகள் மேற்கொள்கிறார்கள்.

35 ஆண்டுகளுக்கும் மேலான சமூகச் சேவையாற்றிய ஜெயக்குமார் நாராயணன், 69, இந்தப் புதிய பொறுப்பில் பொதுமக்களின் தேவைகளை நிறைவுசெய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

1989 முதல் நீ சூன் குழுத்தொகுதியிலும் செம்பவாங் குழுத்தாெகுதியிலும் அடித்தளப் பணிகளைச் செய்துள்ள திரு ஜெயக்குமார், சிங்கப்பூர் மலையாளிகள் சங்கம், சிங்கப்பூர் மலையாளி இந்துச் சங்கம் இவ்விரண்டின் முன்னாள் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

“நியமனம் குறித்து பெருமை அடைகிறேன். சமாதான நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது பெரிய பொறுப்பு. மேலும், எனது கடமைகளைத் தொழில் ரீதியாகவும் பணிவுடனும் நிறைவேற்ற என்னால் முடிந்ததைச் செய்வேன்,” என்று திரு ஜெயக்குமார் கூறினார். 

சிங்கப்பூர் உணவு அமைப்பின் துணை இயக்குநர் எட்வின் இக்னேஷியஸ், மீண்டும் சமாதான நீதிபதியாக நியமிக்கப்பட்டது குறித்து மகிழ்வதாகத் தெரிவித்தார்.

திருமணங்களை நடத்திவைப்பது மறக்க முடியாத தனிப்பட்ட தருணங்கள் என்றும் அவர் கூறினார். 

“இந்தப் பொதுச் சேவைமூலம் பிறரது வாழ்க்கைக்குப் பங்களிப்பது உண்மையிலேயே நற்பேறு,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்