சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கம் அனுபவம் மிகுந்த வழக்கறிஞர் சேமுவல் சாக்கோவை தனது புதிய துணைத் தலைவராக நியமித்துள்ளது. ஏற்கெனவே அந்தப் பொறுப்பில் இருந்த திரு சியா பூன் டெக் பதவி விலகியதைத் தொடர்ந்து, திரு சாக்கோவின் நியமனம் இடம்பெற்றுள்ளது.
திரு சாக்கோவின் நியமனம் உடனடியாக நடப்புக்கு வருவதாக வழக்கறிஞர் சங்கம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்தது. இவரது பதவிக்காலம் 2025 டிசம்பர் 31 வரை நீடிக்கும்.
இதற்கிடையே, மூத்த வழக்கறிஞர் டான் செங் ஹான், சங்கத்தில் வழக்கறிஞர் சட்டத் தொழிலின்கீழ் உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்று வழக்கறிஞர் சங்கம் அதே பதிவில் அறிவித்தது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒருவர் குறித்து பொருத்தமில்லாத கருத்துகளை திரு சியா கூறியதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, மார்ச் 25ஆம் தேதி வழக்கறிஞர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகினார்.
‘லெகிஸ் பாயிண்ட் சேம்பர்ஸ்’ சட்ட நிறுவனத்தில் சமரசத் தீர்வுகாணும் குழுவுக்கு திரு சாக்கோ தற்போது தலைமை தாங்குகிறார். நடுவர் தீர்ப்பாயம், வணிகச் சச்சரவு, அனைத்துலக வர்த்தகம் உள்ளிட்ட அம்சங்களில் இவர் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.
1991ல் வேல்ஸ் கல்லூரிப் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டக்கல்வியை முடித்த திரு சாக்கோ, 1993ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றதாக இவரது நிறுவனத்தின் இணையப்பக்கம் குறிப்பிடுகிறது.

