பாலர் கல்வித் துறையில் 110 கல்வியாளர்கள், கற்பித்தல் வல்லுநர்கள் நியமனம்

பாலர் கல்வித் துறையில் 110 கல்வியாளர்கள், கற்பித்தல் வல்லுநர்கள் நியமனம்

2 mins read
9ba88b8e-9a26-45ef-8490-a7a07f87fd44
சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற கல்வியாளர்கள், கற்பித்தல் வல்லுநர்கள் நியமன விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் கோ பெய் மிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாலர் பள்ளி மாணவர்களின் முழுமையான வளர்ச்சியைத் தொடர்ந்து ஆதரிக்க 110 கல்வியாளர்கள் நியமிக்கப்பட்டு, கற்பித்தல் வல்லுநர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூன்றாவது முறையாக பாலர் பருவக் கல்வி கற்றல் சமூகங்களின் புதிய நியமனங்களை பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு உறுதிசெய்தது.

சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 22) நடைபெற்ற நியமன விழாவில் உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் கோ பெய் மிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

பாலர் பருவக் கல்வி கற்றல் சமூகங்கள் திட்டம் முதன்முதலில் 2022ஆம் ஆண்டில் நான்கு பிரிவுகளுடன் தொடங்கியது. 2024ஆம் ஆண்டு அது ஆறு பிரிவுகளாக விரிவாக்கம் கண்டது.

விளையாட்டு அடிப்படையிலான கற்றல், எண்ணறிவு பிரிவுகள், கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ள இரண்டு பிரிவுகளாகும். இதன்மூலம் தற்போது மொத்தப் பிரிவுகளின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளதாக திரு கோ அறிவித்தார்.

அத்துடன், சமுதாய, உணர்வுபூர்வ மேம்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நடைமுறை என இரு பிரிவுகள் மேம்பாடு காணும் என்றும் அவர் கூறினார்.

“குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதிலும் மாறிவரும் தேவைகளை பூர்த்திசெய்வதிலும் இந்த மேம்பாடுகள் கல்வியாளர்களைச் சிறப்பாகத் தயார்படுத்தும்,” என்று திரு கோ தெரிவித்தார்.

பள்ளி, வீடு தாண்டி குழந்தைகளின் வளர்ச்சிக்குப் பெற்றோரின் பங்கையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“குடும்பங்களின் துணை இருக்கும்போதுதான் கல்வியாளர்களாக உங்களின் தாக்கம் வலுவாக வெளிப்படுகிறது,” என்றார் அவர்.

மீண்டும் நியமிக்கப்பட்ட 27 கற்பித்தல் வல்லுநர்களில் ஒருவரான நிர்மலா தேவி விஜயரெங்கன், ஆரம்பகாலக் கல்வித்துறையில் 20 ஆண்டு அனுபவம் உடையவர்.

தம் சக ஊழியர்களிடமிருந்து கற்றுக்கொள்வது தம்முடைய மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவதாக அவர் நம்புகிறார்.

“என் பாலர் வகுப்பில் உட்கார மறுத்த ஒரு மாணவர் இருந்தார். என் சக ஊழியர்களின் உதவியையும் பிற வளங்களையும் பயன்படுத்தி நான் என் வகுப்பில் அமைதியான ஓர் இடத்தை அந்த மாணவருக்காக ஒதுக்கினேன்,” என்று தமிழ் முரசிடம் திருவாட்டி நிர்மலா கூறினார்.

கடந்த ஆண்டு புதிதாக அறிமுகம் கண்ட இரண்டு பிரிவுகளில் தாய்மொழிப் பிரிவும் ஒன்று.

பாலர் பள்ளிகளில் தமிழ்க் கற்றலை நிலைநிறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையைத் தமது நியமனம் வெளிப்படுத்துவதாக தாய்மொழிப் பிரிவின்கீழ் புதிதாக நியமிக்கப்பட்ட பாடத்திட்ட நிபுணர் ரேணுகா நாராயணசாமி கருதுகிறார்.

“எனது புதிய பொறுப்பின்வழி ஆசிரியர்களுக்காக மேலும் ஆழமான, மாணவர்களை மையமாகக் கொண்ட பாடங்களை என்னால் வகுக்க முடியும் என்று நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்