‘கெபாயா’ அங்கீகாரத்தைக் கொண்டாடிய விருந்து

2 mins read
26278c50-ce5c-42a0-b0a6-6391d131635b
‘கெபாயா’ அணிந்த பங்கேற்பாளர்களுடன் துணை அமைச்சர் டான். - படம்: சாவ் பாவ்

தென்கிழக்காசியாவின் பாரம்பரிய ‘கெபாயா’ உடையை யுனெஸ்கோவின் கலாசார மரபுடைமைப் பட்டியலில் இணைக்கும் முயற்சியில் பங்களித்தோரைப் பாராட்டும் விழா நடைபெற்றது.

தேசிய மரபுடைமைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 10ஆம் தேதி ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் நடைபெற்றது. இதில் கலாசார, சமூக, இளையர் அமைச்சு, வர்த்தக, தொழில்துறை அமைச்சுகளின் துணை அமைச்சர் ஆல்வின் டான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

“தென்கிழக்காசியாவின் தனித்தன்மையான பாரம்பரிய அடையாளம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க, கொண்டாடப்பட வேண்டிய தருணம்,” என்று கூறி நிகழ்வுக்கு வந்திருந்த தென்கிழக்காசிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இதற்காக உழைத்த பிற அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து, “இந்தச் சிறப்புமிக்க பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பின்பற்றி, நமக்கு அளித்த முந்தைய தலைமுறையினரைக் கௌரவிப்பதுடன், இந்தத் தலைமுறையினர் அதனை உணர்ந்து அனுபவித்து, இந்தப் பண்பாட்டினைப் பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் கொண்டுசேர்க்க வேண்டும்,” என்றார் துணை அமைச்சர் ஆல்வின் டான்.

மேலும், ‘கெபாயா’ உடை பயன்பாட்டில் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கில் நவீன வடிவம் எடுத்து வருவதையும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் ‘கெபாயா’ கருப்பொருளில் அமைந்த பொருள்களை வடிவமைத்துள்ள நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள், யுரேசியர் சங்கம், கெபாயா சங்கம் (Kebaya Societe), சிட்டி மெலாக்கா சங்கம், பெரானாக்கான் சங்கம் உள்ளிட்ட பல சமூக கலாசார அமைப்புகளின் பேராளர்களும் பங்கேற்றனர். தவிர, ‘கெபாயா’ தயாரிக்கும் உள்ளூர் கலைஞர் ஹீத் யோ (Heath Yeo), ‘கெபாயா’ உடை விற்பனையாளர்களும் கலந்துகொண்டனர். அவர்களுடன் துணை அமைச்சர் டான் கலந்துரையாடினார்.

‘கெபாயாவின்’ அழகியலையும் முக்கியத்துவத்தையும் சிலிர்ப்புடன் பகிர்ந்த மெர்லின் பிள்ளை.
‘கெபாயாவின்’ அழகியலையும் முக்கியத்துவத்தையும் சிலிர்ப்புடன் பகிர்ந்த மெர்லின் பிள்ளை. - படம்: சாவ் பாவ்

“இது வயது, இன வேறுபாடின்றி அனைவரும் அணியக்கூடிய பெருமைமிகு அடையாளம்,” என்று சொன்னார் இந்நிகழ்வில் பங்கேற்ற சிட்டி மெலாக்கா சங்கத்தைச் சேர்ந்த மெர்லின் பிள்ளை.

கடந்த 15 ஆண்டுகளாக மரபுசார் உணவுமுறை உள்ளிட்ட கலாசாரக் கூறுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வரும் இவர், “இந்த ‘கெபாயா’ உடை அனைவராலும் தைக்கப்படக்கூடியதன்று. அதற்குரிய கலைஞர்களின் உழைப்பில் உருவாகிறது. இப்போதும் இதனை வயதானவர்கள் அணிவது எனும் எண்ணப்போக்கு இருக்கிறது. இந்த நிகழ்வுக்குப் பின்னர் அது மாறி, இதனை இளையர்கள் உணர்ந்து அணிய வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.

இந்த இரவு விருந்து, பாரம்பரிய உடையணிந்த இளம் நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சி, பங்கேற்பாளர்களுக்கும் ‘கெபாயா’ உடைக்குமான பிணைப்பு குறித்த கலந்துரையாடல்களுடன் வண்ணமயமாக நடந்தேறியது.

குறிப்புச் சொற்கள்