சிங்கப்பூரில் தங்களின் தரவுக் கொள்ளளவை அதிகரித்துக்கொள்ள நான்கு தரவு நிலையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு, தொடர்பு (connectivity) ஆகியவற்றுக்கான மையமாக சிங்கப்பூரை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அவற்றில் இந்நடவடிக்கை அடங்கும்.
கூடுதலாக 50 மெகாவாட் கொள்ளளவு
டிஜிட்டல் ரியேலிட்டி, எக்குவினிக்ஸ், கெப்பல் டேட்டா சென்டர்ஸ், எஸ்டி குளோபல் டேட்டா சென்டர்ஸ் ஆகிய தரவு நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் கூடுதலான 50 மெகாவாட் கொள்ளளவு ஒதுக்கப்பட்டுள்ளது. கடுமையான பசுமை எரிசக்தித் தரநிலைகளுக்கு ஏற்ப விடுக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கு ஏற்றவாறு அவற்றுக்குக் கூடுதல் கொள்ளளவு ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 20 தரவு நிலையங்கள், சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகத்திடமும் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்திடமும் கூடுதல் கொள்ளளவைக் கேட்டு பரிந்துரைகளைச் சமர்ப்பித்திருந்தன. அவற்றில் அந்த நான்கு தரவு நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இரண்டாம் தரவு நிலையத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கையைத் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி தொடங்கியது. அதன்கீழ் சம்பந்தப்பட்ட தரவு நிலையங்கள் தங்களின் பரிந்துரைகளைச் சமர்ப்பித்தன.
பசுமை எரிசக்திக்கு முக்கியத்துவம்
பசுமை எரிசக்தியைப் பயன்படுத்தி தங்களின் தரவுக் கொள்ளளவை 50 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்துக்கொள்ள முடிவெடுத்திருப்பதாக சம்பந்தப்பட்ட தரவு நிலையங்கள் தெரிவித்தன என்று சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகமும் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) கூட்டறிக்கையில் தெரிவித்தன.
“உத்திபூர்வ, பொருளியல்ரீதியான, நீடித்த நிலைத்தன்மை தொடர்பான அம்சங்களில் தீர்மானிக்கப்பட்ட இலக்குகளைப் பூர்த்திசெய்யும் ஆற்றலைக் கருத்தில்கொண்டு வெளிப்படையான, போட்டித்தன்மை மிகுந்த நடவடிக்கையின் மூலம் ஒப்புதல் வழங்கப்பட்ட பரிந்துரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன கணினித் தொழில்நுட்பத்துக்குத் தேவையான ஆற்றல் இருப்பதும் அந்த அம்சங்களில் அடங்கும்.
சம்பந்தப்பட்ட தரவு நிலையங்களின் கொள்ளளவில் குறைந்தபட்சம் பாதிக் கொள்ளளவு பையோஃமீத்தேன், குறைந்த கரிமம் கொண்ட அமோனியா, குறைந்த கரிமம் கொண்ட ஹைட்ரஜன் போன்ற பசுமை எரிசக்தித் தெரிவுகளிலிருந்து பெறப்படவேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான்கு தரவு நிலையங்களும் தற்போது சிங்கப்பூர் முழுவதும் பல்வேறு தரவு நிலையங்களை நடத்துகின்றன.


