சிங்கப்பூரில் உள்ள பிள்ளைகளுக்கான நிதியாதரவை அரசாங்கம் மேலும் வலுப்படுத்துவதாகத் தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.
“குழந்தை போனஸ் திட்டம், குழந்தை மேம்பாட்டுக் கணக்கு, பெரிய குடும்பங்களுக்கான திட்டம் எனப் பல திட்டங்கள் பெற்றோருக்கு ஆதரவு வழங்குகின்றன. முதல் பிள்ளை, இரண்டாம் பிள்ளை, மூன்றாம் பிள்ளை என்று ஒவ்வொரு பிள்ளைக்குமான ஆதரவும் மாறுபடுகிறது,” என்று விளக்கம் அளித்த பிரதமர் வோங், திட்டங்களைப் புரிந்துகொள்ள பெற்றோர் சிரமப்படுவதாகக் குறிப்பிட்டார்.
“எனவே, அனைத்தையும் எளிமையாக்குகிறோம். ஒவ்வொரு பிள்ளையும் இனி ஒரே ஆதரவைப் பெறும்,” என்ற அவர், புதிய எஸ்ஜி குழந்தை ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்தார்.
புதிய தொகுப்புத் திட்டத்தின்கீழ், பிறப்பு வரிசை இனி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
ஒவ்வொரு சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்ற பிள்ளைக்கும் $62,000 வரையிலான நிதியாதரவு வழங்கப்படும்.
சிங்கப்பூர்க் குழந்தைகள் பிறந்தவுடனேயே $10,000 நிதியைக் குழந்தை அன்பளிப்பாகப் பெறவிருக்கின்றன. குழந்தை பிறந்த பிறகு 12 மாதங்களுக்குள் அந்தத் தொகை இரண்டு தவணையாகக் கொடுக்கப்படும்.
அந்தக் குழந்தை ஒரு வயதை எட்டும்போது 16 வயதுவரை ஒவ்வோர் ஆண்டும் $2,000 சிறப்புத்தொகையை ரொக்கமாகப் பெறும். பிள்ளைகள் வளரும்போது அவர்களுக்கான ஆதரவைத் தொடர சிறப்புத்தொகையாக மொத்தம் $32,000 சிறப்புத்தொகை ரொக்கமாக வழங்கப்படுகிறது.
மேலும், குழந்தை மேம்பாட்டுக் கணக்கிலும் குழந்தைகளுக்கான தொடக்க மானியமாக அரசாங்கம் $5,000 நிரப்புத்தொகையை வழங்கும். அதே கணக்கில் பெற்றோர் நிரப்பும் ஒவ்வொரு வெள்ளிக்கும் நிகரான தொகையை அரசாங்கம் நிரப்பும். $5,000 வரை அரசாங்கம் வெள்ளிக்கு வெள்ளி என்று நிரப்பும்.
பிள்ளை மேம்பாட்டுக் கணக்கில் போடப்படும் தொகையை ஒவ்வொரு பிள்ளையும் 12 வயதை எட்டும்வரை கல்விக்கோ சுகாதாரத் தேவைக்கோ பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த வயது வரம்பு இனி 16க்கு உயர்த்தப்படுகிறது.
புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கான சுகாதாரச் செலவுகளுக்கு மெடிசேவ் மானியமாக $5,000யும் வழங்கப்படுகிறது.
17 வயதை எட்டும் பிள்ளைகளின் உயர்நிலைக்குப் பிந்திய கல்விக் கணக்கில் கூடுதலாக $10,000 நிரப்பப்படும்.
ஒட்டுமொத்தத்தில் ஒவ்வொரு சிங்கப்பூர்ப் பிள்ளையும் ஏறக்குறைய $70,000 நிதியை நேரடியாகப் பெற்றுக்கொள்ளும்.
“ஒவ்வொரு பிள்ளையும் அதே ஆதரவைப் பெறுவதால் கூடுதல் பிள்ளைகளுடைய குடும்பங்கள் இயல்பாகவே கூடுதல் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும். பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவோருடன் அரசாங்கம் துணை நிற்கும். நாங்கள் கூடுதல் உதவிகளை வழங்குவோம்,” என்று பிரதமர் வோங் உறுதியளித்தார்.


