மே 3ஆம் தேதி வாக்களிப்பு நாளுக்கு இன்னும் சில நாள்களே எஞ்சியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் ஏப்ரல் 28ஆம் தேதி ஆறு பிரசாரக் கூட்டங்களை நடத்தவிருக்கின்றன.
ஃபுல்லர்டன் பிரசாரக் கூட்டம் நண்பகலிலிருந்து பிற்பகல் 3 மணிவரை இடம்பெறும். இதர பிரசாரக் கூட்டங்கள் குடியிருப்புப் பேட்டைகளில் இரவு 7 மணியிலிருந்து 10 மணி வரை நடைபெறும்.
யுஓபி பிளாசாவுக்கு அருகில் உள்ள பிரோமினாட் வட்டாரத்தில் மக்கள் செயல் கட்சியின் ஜாலான் புசார் குழுத்தொகுதி வேட்பாளர்கள் பிரசாரம் செய்யவிருக்கின்றனர்.
இரவு பிரசாரக் கூட்டங்களில் மக்கள் செயல் கட்சி மூன்று பேட்டைகளிலும் பாட்டாளிக் கட்சி ஒரு பேட்டையிலும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி ஒரு பேட்டையிலும் மக்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் இறங்கவிருக்கின்றன.
ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி பிரசாரக் கூட்டங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுவதால் கூடுமான வரை அனைவரும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்படி காவல்துறை அறிவுறுத்தியது.
பிரசாரக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு அருகில் உள்ள கார் நிறுத்துமிடங்களில் குடியிருப்பாளர்களுக்கு மட்டும் அனுமதி உண்டு.
பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்வோர் லேசர் கதிர் கருவிகள், வாணவேடிக்கை ஆகியவற்றைக் கொண்டுவர அனுமதியில்லை.

