மர்ம உலோகப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேலான நிலையில் அதே ஆடம் பார்க்கில் மீண்டும் தொல்பொருள் ஆய்வு நடத்தப்படவிருக்கிறது.
இம்முறை அந்த மர்மப் பெட்டி மண்ணிலிருந்து வெளியே எடுக்கப்படலாம். அப்படி எடுக்கப்பட்டால் இரண்டாம் உலகப் போரின் போர்க்களமாக விளங்கிய அந்த இடத்தைப் பற்றி வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் உலகப்போரின்போது போர்க்களமாகவும் சிறைக் கைதிகளின் முகாமாகவும் ஆடம் பார்க் இருந்தது.
“அந்த மர்மப் பெட்டியை அசைக்கவில்லை. நேரம் குறைவாக இருந்ததால் அப்படியே விட்டுவிட்டு வந்தோம்,” என்று 2013 நவம்பரில் மேற்கொண்ட தொல்பொருள் ஆய்வின்போது தொண்டூழியராகச் செயல்பட்ட திருவாட்டி சிமோன் லீ தெரிவித்தார்.
“அந்தப் பெட்டி அங்கு எப்படி வந்து சேர்ந்தது என்பதற்கு ஒரு கதை இருக்கலாம். எங்களுக்கு கதைகள் மிகவும் பிடிக்கும். வரிசை எண்ணோ, அதைச் செய்தவர்களின் அடையாளமோ எதுவாக இருந்தாலும் அது ஆர்வமான ஒரு வரலாற்றுத் தடயமாக இருக்கும்,” என்றார் அவர்.
ஏறக்குறைய 12.8 ஹெக்டர் பரப்பளவு கொண்ட காலனித்துவ காலத்தின் ஆடம் பார்க் வளாகத்தில் 19 பழமையான பங்களாக்கள் உள்ளன. அந்த இடத்தில் குடியிருப்புக் கட்டடங்கள் கட்டப்படவிருக்கின்றன.
அதற்கு முன்பு தொல்பொருள் ஆய்வு மீண்டும் மேற்கொள்ளப்படுகிறது.
முந்தைய ஆய்வு பெரிய அளவில் நடத்தப்பட்டது. தொல்பொருள் ஆய்வாளரான ஜோன் கூப்பரால் நிர்வகிக்கப்பட்ட ஆடம் பார்க் திட்டம் என்ற அந்த ஆய்வில் 1,000க்கும் மேற்பட்ட கலைப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் எல்லாவற்றையும் மீட்க முடியவில்லை. அவற்றில் உலோகப் பெட்டியும் ஒன்று. அது, 3 ஆடம் பார்க் புல்வெளியில் புதைக்கப்பட்டிருந்தது. குறைந்தது 55 செ.மீட்டர் உயரத்தில் அது இருந்தது என்று திருவாட்டி லீ தெரிவிக்கிறார்.
பெட்டியின் பக்கவாட்டில் இருந்த துளைக்குள் படமெடுப்பதற்காக ஒரு கைப்பேசியை நுழைக்க முடிந்தது.
அதில் தெரிந்ததைப் பார்த்தால், அது ஒரு வெடிமருந்துப் பெட்டியாக இருக்கலாம் என்று டாக்டர் கூப்பர் சந்தேகிப்பதாக திருவாட்டி லீ கூறினார்.
அதனுள் என்ன இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த விரும்புவதாகவும் அந்தப் பெட்டியை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

