முதுமை காரணமாக காலமான முன்னாள் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், சிங்கப்பூருடனான அணுக்க உறவுகளுக்கு அடித்தளம் போட்டவர் என்று போற்றப்படுகிறார்.
கடந்த 1994ஆம் ஆண்டு சிங்கப்பூர் பிரதமராக இருந்த கோ சோக் டோங், சிங்கப்பூரில் இந்தியாவின் நட்புத்தடம் பற்றி முதன்முதலில் பேசினார்.
அப்போது இந்தியாவின் நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்த டாக்டர் சிங்கிற்கு அது பெரும் ஊக்கமாக அமைந்தது.
‘லைசென்ஸ் ராஜ்’ எனப்படும் அனுமதிச்சீட்டு அரசியல் முறையைத் தளர்த்தி பொருளியலைத் தளர்த்தோங்கச் செய்வதில் அப்போது அவர் ஈடுபட்டு இருந்தார்.
விடுதலை அடைந்த இந்தியாவில், 1950ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டின் முற்பகுதி வரை நடைமுறையிலிருந்த வணிகத்தின் மீதான கடும் கட்டுப்பாட்டுகளைக் கொண்டிருந்த கொள்கையே ‘லைசென்ஸ் ராஜ்’ முறை ஆகும்.
அந்தக் காலகட்டத்தில், இந்தியாவில் வணிகம் செய்ய ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்தன. தொழில் தொடங்குவதற்கான அனுமதியைப் பெற கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன.
அவற்றை விரைவாகத் தளர்த்தி வெற்றிகண்டவர் டாக்டர் சிங்.
2005ஆம் ஆண்டு அப்போதைய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு புதுடெல்லியில் சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நிகழ்வில் உரையாற்றிய திரு சிங், சிங்கப்பூருடனான உறவு அன்பும் தோழமையும் நிறைந்தது என்று புகழ்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தியாவின் சீர்திருத்த நடைமுறை 1991ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து, சிங்கப்பூர் தொடர்ந்து ஏற்றத்துடன் மிளிர்கிறது. அதனை நாம் பாராட்டியாக வேண்டும்.
“இந்தியா தனது அபரிதமான வளர்ச்சித் திறனை உணரத் தொடங்கி இருக்கும் வேளையில், விரிவான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு (CECA) எட்டப்பட்டதும் இந்தியாவுக்குள் சிங்கப்பூர் ஒரு சாளரமாகச் செயல்பட முடியும்.
“இருநாடுகளுக்கும் இடையிலான உறவை அடித்தளமாகக் கொண்டு உருவானதுதான் பொருளியல் உறவு. இந்தியாவின் ஆகப்பெரிய ஆசியான் வர்த்தகப் பங்காளியாக சிங்கப்பூர் விளங்குகிறது.
“செகா (CECA) என்னும் முன்னேற்ற உடன்பாடு நமது வர்த்தக, பொருளியல் உறவுகளை விரைந்து விரிவாக்கக் கைகொடுக்கும் என்று கருதுகிறேன்.
“நாம் ஏற்கெனவே தற்காப்பு, பாதுகாப்பு, கலாசாரம், கல்வி போன்ற பல துறைகளில் விரைவாக வளர்ச்சி கண்டுவருவதைக் காண்கிறோம்.
“நமது இருதரப்பு உறவு சாத்தியங்கள் நிறைந்தது. பொருளியல் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் நமக்கு இடையே பொதுவான கண்ணோட்டமும் புரிதலும் உள்ளன,” என்று திரு சிங் தெரிவித்தார்.
2005 ஜூன் 29ஆம் தேதி செகா உடன்பாட்டில் திரு சிங்கும் திரு லீயும் கையெழுத்திட்டனர். அந்த உடன்பாடு சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கத்திற்கு வழி வகுத்தது.
சிங்கப்பூரின் முன்னாள் அரசாங்க ஊழியரும் டாடா சன்ஸ், ஆசியான் வட்டார இயக்குநருமான திரு கே.வி. ராவ் கருத்துரைக்கையில், “டாக்டர் மன்மோகன் சிங் இந்தியப் பொருளியலை தாராளமாக்கிய சிற்பி மட்டுமல்ல, ஆசியான் நாடுகளின் அணுக்கமான ஒத்துழைப்புக்கு வித்திட்டவரும்கூட,” என்றார்.
“சிங்கப்பூர் மீது மிகுந்த மரியாதையும் நாட்டமும் கொண்டவர் அவர். 2007, 2011 ஆகிய ஆண்டுகளில் வருகை தந்தபோது சிங்கப்பூரின் வளர்ச்சியைக் கண்டு வியந்த திரு சிங், இருதரப்பு உறவை வலுப்படுத்தவும் அணுக்க ஒத்துழைப்பை வளர்க்கவும் அவசியம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்,” என்றார் திரு ராவ்.
சிங்கப்பூர் பற்றி 2005ஆம் ஆண்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் நேர்காணலின்போது கூறிய டாக்டர் சிங், “சிங்கப்பூருக்குப் பலமுறை வந்துள்ளேன். இயற்கை வளம் இல்லாத நிலையில் ஒரே ஒரு தலைமுறை இந்த நாட்டை முன்னேற்றி இருப்பது கண்டு ஒவ்வொரு முறையும் வியந்திருக்கிறேன்,” என்றார்.

