மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இந்தியாவைச் சேர்ந்த 48 வயது பெண், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ல் எட்டு மீட்டர் ஆழமுள்ள புதைகுழியில் விழுந்து மாண்டார்.
ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த அந்தப் பெண், சுற்றுப்பயணியாக மலேசியாவுக்குச் சென்றிருந்தார்.
கோலாலம்பூரின் ஜாலான் மஸ்ஜித் பகுதியில் அந்தப் பெண் சாலையோர நடைபாதையில் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பகுதி திடீரெனப் பள்ளமானது.
இதுவரை, அந்தப் பெண் அணிந்திருந்த செருப்புகளே கண்டுபிடிக்கப்பட்டது.
புதைகுழிக்குக் கீழ் உள்ள வலுவான நீரோட்டங்களால் தேடல், மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன.
இத்தகைய புதைகுழிகள் எப்படி உருவாகின்றன?
மண்ணின் ஆழத்திலுள்ள கரையக்கூடிய வகையான கற்கள் சில கரையும்போது மேல்மட்டத்தில் உருவாகும் பள்ளத்திற்குப் புதைகுழி என வகைப்படுத்தப்படுவதாக லண்டனின் புவியியல் சங்கம் கூறுகிறது.
இத்தகைய கற்கள் ஆழத்தில் எந்தக் கூட்டமைப்பில் காணப்படுகின்றன, உள்ளிட்ட சில காரணங்கள் புதைகுழிகளின் வடிவம், அளவு, ஆழம் ஆகியவற்றைத் தீர்மானிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
அமிலத்தன்மை மிகுந்த மழையாலும் நிலத்தடியில் வழிந்தோடும் நீராலும் நிலத்தடி கற்கள் இயற்கையாக கரைகின்றன. அவ்வாறு கரையும்போது தொடக்கத்தில் சிறு குகைகள் நிலத்தடியில் உருவாகி அவை பெருகி வருவதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்தது.
சுண்ணக்கட்டி (chalk), உறைகளிக்கல் (gypsum), சுண்ணாம்புக் கல் (limestone) ஆகியவை, கரையக்கூடிய கற்களில் சில எடுத்துக்காட்டுகள்.
புதைகுழிகள் உருவாகும் சாத்தியம், வறட்சியாலும் கனமழையாலும் கூடுகிறது. கட்டுமானம், நிலத்தடி நீரை இறைத்தல் போன்ற மனித நடவடிக்கையாலும் அவை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
புதைகுழிகள் பொதுவாக இயற்கைப் பேரிடராகக் கருதப்பட்டாலும் அவற்றின் உருவாக்கத்தில் செயற்கையான மனித காரணங்களும் பங்கு வகிக்கின்றன.
உடைந்த வடிகால் தொட்டிகள், தண்ணீர்க் குழாய்கள், சாக்கடை குழாய்கள் ஆகியவற்றால் அழுக்குப் பொருள்கள், மண்ணுக்குள் செலுத்தப்படுகின்றன. அதனால் புதைகுழிகள் ஏற்படும் ஆபத்து கூடுகிறது.
2022ல் ஃபேர்ரர் ரோட்டுப் பகுதியில், பொதுப்பயனீட்டுக் கழகம் ஆழ்துளை இயந்திரத்தைப் பயன்படுத்தியதை அடுத்து அந்தப் பகுதியில் குழி விழுந்தது.
2013ல், உட்லண்ட்ஸ் ரோட்டின் ஒரு பகுதியிலும் குழிவிழுந்தது. இரு சம்பவங்களிலும் யாரும் காயமடையவில்லை.