முஸ்லிம் தம்பதிகளுக்குக் கைகொடுக்கும் ‘அரிஃப்’ திட்டம் அறிமுகம்

முஸ்லிம் தம்பதிகளுக்குக் கைகொடுக்கும் ‘அரிஃப்’ திட்டம் அறிமுகம்

2 mins read
eaf1973a-98ad-466b-a1d3-60c7a515aad3
அரிஃப் திட்டம் கிட்டத்தட்ட 200 குழந்தைகளைச் சென்றடைந்தது என்றார் முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபை‌‌‌ஷால் இப்ராஹிம் (வலக்கோடி). - படம்: பெரித்தா ஹரியான்

சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம் தம்பதிகளுக்குத் திருமண வாழ்க்கையிலும் ஆரம்பகட்ட குடும்ப வாழ்க்கையிலும் உதவ புதிய திட்டம் கைகொடுக்கவுள்ளது.

மீள்திறன்மிக்க, உத்வேகம் நிறைந்த குடும்பங்களை உருவாக்குவதல் (அரிஃப்) என்ற அத்திட்டம், கருவுறும் முன், கறுவுற்றப்பின், பிள்ளைப் பராமரிப்பு, ஆரம்பகட்ட பிள்ளைப் பருவம் தொடர்பான விவகாரங்களில் திருமணத்துக்கு முன்னரிலிருந்து திருமணத்துக்குப் பின் ஈராண்டுவரை தம்பதிகளுக்கு ஆலோசனை வழங்கும்.

முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபை‌‌‌ஷால் இப்ராஹிம் அதுகுறித்து தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னோட்டமாகத் தொடங்கப்பட்ட அரிஃப் திட்டம், இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து ‘பெர்சமாமு’ என்ற திட்டத்தின்கீழ் வரும்.

தெமாசெக் அறநிறுவனம், கே.கே. மகளிர், சிறார் மருத்துவமனை, சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் அரிஃப் திட்டத்தின் முன்னோட்டம் தொடங்கியது.

பெற்றோரை இன்னும் சிறந்த வகையில் தயார்படுத்தி, ஒவ்வொரு பிள்ளைக்கும் உறுதியான தொடக்கத்தைத் தருவது அரிஃப் திட்டத்தின் இலக்கு.

முஸ்லிம் நிபுணர்கள் சங்கம், அரிஃப் திட்டத்தை வழிநடத்த நியமிக்கப்படும்.

திட்டத்தின் முன்னோட்டம் தொடங்கியதிலிருந்து, பொது விழிப்புணர்வுக் கலந்துரையாடல்கள் மூலம் ஏறக்குறைய 12,000 பேர் பயனடைந்துள்ளனர் என்றார் பேராசிரியர் ஃபை‌‌‌ஷால்.

அவர்களில் கிட்டத்தட்ட 5,175 தம்பதிகள், தாய்மாருக்கான, பிள்ளைச் சுகாதாரத்துக்கான கையேட்டைப் பெற்றனர்.

அதில் புதிதாக பிறக்கும் பிள்ளைகளை வளர்ப்பதற்குரிய வழிகாட்டி குறிப்புகள் உள்ளன.

ஏறக்குறைய 124 திருமணப் பதிவாளர்களும் பள்ளிவாசல் ஊழியர்களும் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க கே.கே. மருத்துவமனையின்கீழ் பயிற்சி பெற்றனர்.

‘அரிஃப்’ திட்டம் கிட்டத்தட்ட 200 குழந்தைகளைச் சென்றடைந்தது என்றார் பேராசிரியர் ஃபை‌‌‌ஷால்.

குறிப்புச் சொற்கள்