சிங்கப்பூரில் மாணவர் விசாவில் தங்கியிருந்த இந்திய நாட்டு ஆடவர் 64 வயது பெண்ணிடம் ஆயுதமேந்திய கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டார்.
சிறிய பிளேடைக் கொண்டு 27 வயது சம்ஷேர் சிங் அப்பெண்ணின் கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்படுத்தினார்.
கொள்ளைச் சம்பவம் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி மவுண்ட்பேட்டன் சாலையில் நடந்தது. ஆடவரால் அப்பெண்ணிடம் இருந்து எந்தப் பொருளும் எடுக்கமுடியாததால் அந்த இடத்திலிருந்து தப்பியோடினார்.
கொள்ளை குறித்து உடனடியாக அப்பெண் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து சம்ஷேர் சிங் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சம்ஷேர் சிங்குக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) தண்டனை விதிக்கப்பட்டது. ஆடவரின் குற்றச் செயல்களுக்கு 8 ஆண்டுகள் 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் அவருக்கு 12 பிரம்படிகளும், 1,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
காயமடைந்த பெண் டான் டொக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு 30 நாள் மருத்துவமனை விடுப்பு வழங்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு மேலாக அவரால் இயல்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை.

