ஃபேரர் பார்க்கில் ஆயுதமேந்திய கொள்ளை; மூவர் கைது

$16,300 ரொக்கம், தங்க நகைகள் கொள்ளை

ஃபேரர் பார்க்கில் ஆயுதமேந்திய கொள்ளை; மூவர் கைது

1 mins read
14ca7ab2-7c1c-4254-9eca-d89fc44fb765
சந்தேக நபர்கள் வீட்டில் இருந்த நால்வரிடமும் கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்டனர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை
Google News Preferred Icon

ஃபேரர் பார்க் வட்டாரத்தில் உள்ள குடியிருப்பு வீடு ஒன்றில் ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவம் நடந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அதன் தொடர்பில் மூன்று பேரைக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அந்த ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவம் ஏப்ரல் 10 ஆம் தேதி இரவு ரங்கூன் சாலையில் உள்ள வீட்டில் நடந்ததாக நம்பப்படுகிறது.

இரவு 11.25 மணிக்குத் தங்களுக்குத் தகவல் வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

சம்பவத்தின்போது அந்த வீட்டில் இருந்த நால்வரில் மூவருக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டன.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) காவல்துறை அறிக்கை வெளியிட்டது.

அறிக்கையில், சந்தேக நபர்கள் மூவரும் திட்டமிட்டு வீட்டிற்குள் புகுந்ததாகவும் வீட்டில் இருந்த நால்வரையும் கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அச்சத்தில் தங்களிடம் இருந்த $16,300 ரொக்கம் மற்றும் இரண்டு தங்க நகைகளை வீட்டிலிருந்தவர்கள் கொடுத்தனர். அதன்பிறகு கொள்ளையர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். சந்தேக நபர்கள் ஏப்ரல் 11ஆம் தேதி மார்சிலிங் டிரைவில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கத்தி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

மூவர்மீதும் திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 13) குற்றஞ்சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்