தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

13வது மாடி வீட்டிலிருந்து குதிக்கப்போவதாக மிரட்டிய முதியவர் கைது

2 mins read
0bf49119-cbca-48e2-afe2-031082eb7d6a
தெம்பனிஸ் அவென்யூ 9ல் உள்ள 13வது மாடி வீவக வீட்டின் சன்னல் விளிம்பில் ஆடவர் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அமர்ந்திருந்ததாகக் கூறப்பட்டது. - படங்கள்: மதர்ஷிப் இணையத்தளம்/ஷின் மின் நாளேடு, கூகல் மேப்ஸ்

தெம்பனிஸ் அவென்யூ 9ல் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்கின் 13வது மாடி வீட்டுச் சன்னலிலிருந்து கீழே குதிக்கப் போவதாக மிரட்டிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனவரி 9ஆம் தேதி அந்த 67 வயது ஆடவர் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சன்னல் விளிம்பில் அமர்ந்திருந்ததாகக் கூறப்பட்டது.

அங்கிருந்து குதிக்கப் போவதாக அவர் மிரட்டியதாக ஷின் மின் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 11.55 மணியளவில் உதவிகேட்டு அழைப்பு வந்ததாக மதர்ஷிப்பின் கேள்விக்குப் பதிலளிக்கையில் காவல்துறை குறிப்பிட்டது.

காவல்துறையினர் சென்றபோது அந்த முதியவர் வீட்டை உள்ளிருந்து பூட்டியிருப்பது தெரியவந்தது.

அவராலேயே அவரது உயிருக்கு ஆபத்து நேரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டதால் காவல்துறையின் சிறப்புச் செயலாக்கத் தளபத்தியம், நெருக்கடிநிலைப் பேச்சுவார்த்தைப் பிரிவு (CNU), சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆடவர் மீட்கப்பட்டார். எனினும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

ஆடவரின் செயலால் சம்பவ இடத்தில் பலர் கூடினர். அதிகாரிகள் அந்த இடத்தை அடைந்ததும் ஆடவரின் பாதுகாப்பை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேநேரத்தில் பேரிடர் உதவி, மீட்புக் குழுவினர் (DART) கட்டடத்தின் 15வது மாடி வீட்டிலிருந்து, கயிறு கட்டி செங்குத்தாகக் கீழே இறங்கினர்.

சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

பிற்பகல் 3.35 மணிக்குக் காவல்துறையினர் ஆடவரின் வீட்டிற்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டது.

மத்தியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு இச்சம்பவம் குறித்து விசாரணையைத் தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்