வெளிப்புற நிறுவனத்தின் மூலம் கூ டெக் புவாட் மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்ட தாதி ஒருவர், அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பணிப்பெண்ணிடமிருந்து $1,100ஐத் திருடி விட்டார்.
இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்ட பி. சிவ பிரவீனா எனும் அந்தத் தாதி, ஜூலை 31ஆம் தேதியன்று தனது கருணை மனுவைத் தாக்கல் செய்து தீர்ப்பைத் தெரிந்துகொள்ள நீதிமன்றத்துக்கு வரவில்லை.
இந்தக் காரணத்தால் அந்த 30 வயது சிங்கப்பூரருக்கு எதிராக கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பிரவீனா, இதற்கு முன் தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்திருந்ததாக நீதிமன்றத்தில் அவரது தற்காப்பு வழக்கறிஞர் கோவிந்தராஜு சின்னப்பன் கூறினார். ஆனால் அதற்கான ஆதாரங்களை பிரவீனா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.
மருத்துவ காரணங்களுக்காக அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியது இது முதல் முறை அல்ல என்று நீதிமன்றம் கூறியது.
அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட கைதாணை மீதான மறுபரிசீலனை செப்டம்பர் 10ஆம் தேதி இடம்பெறும்.
இதற்கு முன் அவர் புரிந்த ஒரு திருட்டுக் குற்றச்சாட்டையும், உரிமம் இல்லாத கடன் வழங்கும் தொழிலுக்கு உதவியதாக மூன்று குற்றச்சாட்டுகளையும் பிரவீனா ஒப்புக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
அவர் திருடிய பணத்தைக் கொண்டு கடன்கொடுத்தவர்களிடம் தான் பட்ட கடனை அடைக்க பயன்படுத்தியதாக கூறிய பிரவீனா, தான் திருடிய பணம் முழுவதையும் திரும்பக் கொடுத்து விட்டார்.
மே 12ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு, 33 வயது மியன்மார் பணிப்பெண், வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகிய காரணங்களுக்காக கூ டெக் புவாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் மெலிசா ஹெங் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தும் படுக்கைப் பிரிவுக்கு மாற்றப்படுவதற்கு முன் அந்த மியன்மார் பெண், விபத்து மற்றும் அவசரநிலைப் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
விபத்து மற்றும் அவசரநிலைப் பிரிவில் பிரவீனா பணியில் இருந்தார். அப்போது அந்தப் பணிப்பெண் தனது படுக்கைக்கு அருகே இயற்கை உபாதையை கழித்துக்கொண்டிருக்கும்போது, பிரவீனா அந்தப் பணிப்பெண்ணின் பணப்பையிலிருந்து $1,100ஐத் திருடினார்.
தனது பணம் திருடு போனதை அன்று இரவு 7 மணிக்கு பணிப்பெண் உணர்ந்தார். அதுபற்றி மற்றொரு தாதியிடம் அவர் கூற, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

