ஆழ்கடலின் மர்மங்களையும் அதன் அதிசயங்களையும் நேரில் கண்டு ரசிக்கும் அரியதொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது சிங்கப்பூர் கலை அறிவியல் அருங்காட்சியகம் ஏற்பாடு செய்துள்ள கண்காட்சி.
சிங்கப்பூரின் கலை அறிவியல் அருங்காட்சியகம், உலக அளவில் கடல் ஆராய்ச்சியில் முன்னிலை வகிக்கும் ‘ஓஷன்எக்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, மனிதக் கண்களுக்குப் தென்படாத ஆழ்கடலின் அதிசயங்களை முதன்முறையாக சிங்கப்பூருக்குக் கொண்டுவந்திருக்கிறது.
‘பெருங்கடலடிப் பயணம்’ என்ற தலைப்பிலான இக்கண்காட்சி ஜூன் 6 முதல் நவம்பர் 1 வரை இடம்பெறும்.
கலை, அறிவியல், நவீனத் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கலந்து வியக்கத்தக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, வருகையாளர்களுக்குக் கடலின் ஆழமான பகுதிகளைக் காண்பிக்கிறது.
“சில நேரங்களில் அறிவியல் கருத்துகளைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம். எனவே, கலைஞர்களுடன் இணைந்து அந்தக் கருத்துகளை வெளிப்படுத்த முயலும்போது அது எளிதில் புரிந்துகொள்ள உதவுகிறது,” என்று கலை அறிவியல் அருங்காட்சியகத்தின் இயக்குநர் ஏட்ரியன் ஜார்ஜ் கூறினார்
பார்வையாளர்களின் பயணம் ஓஷன்எக்ஸ் அமைப்பின் அதிநவீன ஆராய்ச்சி கப்பலான ‘ஆர்/வி பெருங்கடல் ஆய்கலம்’ தளத்திலிருந்து தொடங்குகிறது.
கப்பலின் தளத்தில் கால் வைக்கும்போதே, நேரடி ஆழ்கடல் ஆராய்ச்சியின் பரபரப்பான சூழலை நேரில் உணர முடிகிறது.
அதனைத் தொடர்ந்து, பார்வையாளர்கள் கடலின் ஆழத்தை நோக்கி தங்களது பயணத்தைத் தொடங்குவர்.
தொடர்புடைய செய்திகள்
கடலின் ஆழம் அதிகரிக்க, சுற்றுப்புறத்தின் நீல நிறம் மெல்ல இருளாக மாறுவதையும், அந்தக் கடுமையான இருளில் வாழும் விசித்திரமான உயிரினங்கள் தோன்றுவதையும் பார்வையாளர்கள் அங்கு நேரில் காணலாம். பல்வேறு கடல் உயிரினங்கள் கடலின் சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதையும் அவர்கள் அறிந்துகொள்வர்.
அந்தப் பயணம் இறுதியாக ‘ரீசர்ஃபேஸ்’ என்ற வெளிச்சம் நிறைந்த அங்கத்துடன் நிறைவடைகிறது. கடலின் ஆழத்தைப் பார்த்து ரசிப்பதுடன் நின்றுவிடாமல், அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அந்த அங்கம் உணர்த்த முற்படுகிறது.
மனிதர்கள் எடுக்கும் சிறிய கூட்டுமுயற்சிகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் கடலின் எதிர்காலத்தைப் பாதுகாக்க எப்படிப் பெரிய அளவில் உதவும் என்பதை அந்தப் பகுதி விவரிக்கிறது. “மக்கள் இந்தக் கண்காட்சியைவிட்டு வெளியேறும்போது ‘சுற்றுச்சூழலுக்கு நான் என்ன செய்ய முடியும்?’என்ற கேள்வியுடன் செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்,” என்று ஓஷன்எக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கே வேசி கூறினார்.
உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் கலைப்படைப்புகள் மூலமாகக் கடலின் அருமை பார்வையாளர்களுக்குக் காட்டப்படுகிறது. ஆழ்கடலின் ரகசியங்களையும் அதன் அழகையும் அனுபவிக்க வாய்ப்பு இதன்வழி வருகையாளர்களுக்குக் கிட்டும் என ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

