சிங்கப்பூர்க் கலை வாரத்தின் ஒரு பகுதியாக தென்கிழக்காசியாவின் அனைத்துலகச் சமகாலக் கலைக் கண்காட்சியான ‘ஆர்ட்ஸ் எஸ்ஜி’ நான்காவது முறையாக சிங்கப்பூருக்குத் திரும்புகிறது.
மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் 2026 ஜனவரி 23 முதல் 25 வரை ‘ஆர்ட்ஸ் எஸ்ஜி’ கண்காட்சி நடைபெறவுள்ளது.
தென்கிழக்காசியாவின் கலை வடிவங்களைக் காட்சிப்படுத்தி, சந்தைப்படுத்தும் ‘எஸ்.இ.ஏ. ஃபோக்கஸ்’ (S.E.A. Focus) எனும் உள்நாட்டுத் தளம் முதன்முறையாக கலைக் கண்காட்சியில் பல அங்கங்களை வழிநடத்தவுள்ளது.
“இந்த முயற்சியின்மூலம், தென்கிழக்காசியாவின் துடிப்பான மையமாக இருக்கும் சிங்கப்பூரின் பங்கு வலுவடைகிறது,” என்றார் ‘ஆர்ட்ஸ் எஸ்ஜி’ கண்காட்சியின் இணை நிறுவனர் மேக்னஸ் ரென்ஃப்ரூ.
யுபிஎஸ் சுவிஸ் வங்கியின் ஆதரவில் ‘தி ஹுயுமேன் ஏஜென்சி’ எனும் கருப்பொருளில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 30க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஏறத்தாழ 106 கலைக் காட்சியகங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகத்தை ஆதரிக்கும் ‘ஆர்ட்ஸ் எஸ்ஜி’ வளர்ந்துவரும் கலைஞர்களின் கலைப்படைப்புகளைப் பெறுவதற்காக $150,000 ஒதுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
‘ஆர்ட்ஸ் எஸ்ஜி’ கலைக் கண்காட்சி பற்றிய கூடுதல் தகவல்களுக்கு பொதுமக்கள் artsg.com எனும் இணையத்தளத்தை நாடலாம்.
சிங்கப்பூர்க் கலை வாரம் 2026 ஜனவரி 22 - 31 தேதிகளில் நடைபெறும். கண்காட்சியைத் தவிர்த்து, இடம்பெறவுள்ள மற்ற நிகழ்ச்சிகளையும் பற்றி அறிய artweek.sg எனும் இணையத்தளத்தை நாடலாம்.

