மத்திய சேம நிதிக் கழகத்தில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு

மத்திய சேம நிதிக் கழகத்தில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு

2 mins read
2ae46253-6df0-4d4e-886b-fa475867a959
மத்தியச் சேம நிதி வாரியம், தனது அவசர சேவை எண்ணுக்கு வரும் அழைப்புகளை எழுதிவைக்கவும் அவற்றின் சுருக்கத்தைக் கொடுக்கவும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மார்ச் மாதத்திலிருந்து பயன்படுத்தி வருகிறது. - படம்: சாவ்பாவ்

மத்திய சேம நிதிக் கழகம், தனது அவசர சேவை எண்ணுக்கு வரும் அழைப்புகளை எழுதிவைக்கவும் அவற்றின் சுருக்கத்தைக் கொடுக்கவும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மார்ச் மாதத்திலிருந்து பயன்படுத்தி வருகிறது. அதன் மூலம் நிலையத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் கூடுதலான அழைப்புகளை ஏற்கவும் கூடுதல் உதவி தேவைப்படுவோருக்குக் கைகொடுக்கவும் முடிகிறது.

என்சிஎஸ் (NCS) எனும் உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் தற்போது புதிய வசதி முன்னோட்டமாகச் சோதிக்கப்படுகிறது. தொழில்நுட்பப் பயன்பாட்டில் அவ்வளவாகப் பரிட்சயமில்லாதோரை அடையாளம் கண்டு நிலைய ஊழியரைத் துரிதமாகத் தொடர்புகொள்ள அந்த வசதி வகை செய்கிறது. இதற்குமுன், அழைப்புகளை ஏற்கும் ஒவ்வோர் ஊழியரும் உரையாடலுக்குப் பின் அதை எழுதிவைக்க வேண்டும்.

“இப்போது அவர்கள் பேசியது சரியாக எழுதப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்த்தால் போதும்,” என்றார் மத்திய சேம நிதிக் கழகத் தொடர்புத் தகவல் தொழில்நுட்ப, மின்னிலக்கச் சேவைகள் பிரிவு துணைத் தலைமை நிர்வாக அதிகாரி இங் ஹொக் கியோங்.

‘என்சிஎஸ் இம்பேக்ட்’ மாநாட்டுக்கு இடையே பேசிய அவர், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் சிங்கப்பூரர்களுக்கு இன்னும் சிறந்த முறையில் சேவை வழங்குவது திட்டத்தின் நோக்கம் என்றார். கடந்த ஆண்டு மத்திய சேம நிதிக் கழக அழைப்பு நிலையம் ஏறக்குறைய 662,000 அழைப்புகளைக் கையாண்டது. அமேசான் இணையச் சேவைகள் நிறுவனத்தின் மேக கணினியின் பெரிய மொழி மாதிரியைக் கொண்டு செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

தற்போது அது ஆங்கிலம், சீனம், மலாய் ஆகிய மொழிகளில் உரையாடல்களை எழுதித் தருகிறது. தமிழ்மொழியில் அதைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

குறிப்புச் சொற்கள்
மத்திய சேம நிதிசெயற்கை நுண்ணறிவுதகவல் தொழில்நுட்பம்