சிங்கப்பூர் தனது அடுத்தகட்ட வளர்ச்சிக்காகச் செயற்கை நுண்ணறிவை நோக்கிச் செல்லும் வேளையில், அனைத்து சிங்கப்பூரர்களும், குறிப்பாகக் குறைந்த வருமானக் குடும்பங்கள் தொழில்நுட்பத்தை அணுக வசதிகள் இருக்கவேண்டும்; அதனை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து நன்கு கற்றுத்தரப்படவேண்டும் என்று நிதி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
நன்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், செயற்கை நுண்ணறிவு ஏற்றத்தாழ்வைக் குறைக்கக்கூடும் என்று அவர் கூறினார்.
பிரதமர் லாரன்ஸ் வோங் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியிட்ட வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தொடர்ந்து, குமாரி இந்திராணி வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்திய ‘தி யூசுவல் பிளேஸ்’ வலையொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
$154.7 பில்லியன் மதிப்பிலான வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகளில், தேசிய அளவிலான செயற்கை நுண்ணறிவு இலக்குகள் அடங்கும். அவற்றில் ஒன்று, பிரதமர் வோங்கின் தலைமையில் அமையவிருக்கும் புதிய தேசிய செயற்கை நுண்ணறிவு மன்றம்.
சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு முயற்சியில், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் சிலர் பின்தங்கிவிடுவார்களா என்று படைப்பாளர் நடாஷா ஆன் ஸக்கரியா கேள்வி எழுப்பினார். அதற்கு ஏற்றத்தாழ்வைக் குறைக்கவும், அதனை மேலும் மோசமாக்கவும் செயற்கை நுண்ணறிவுக்கு ஆற்றல் உண்டு என்றார் குமாரி இந்திராணி.
பதில்களுக்குச் செயற்கை நுண்ணறிவைச் சார்ந்திருப்பதைவிட, அதனை நெறியோடு, நன்கு சிந்தித்துப் பயன்படுத்துவதற்கு இளவயதிலிருந்தே சிங்கப்பூரர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படுவதை உறுதிசெய்வது ஒரு பகுதி என்று அவர் சொன்னார்.
அத்துடன், செயற்கை நுண்ணறிவால் தங்கள் வேலைகளை இழந்துவிடக்கூடும் என்ற ஊழியர்களின் கவலையைப் புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். அந்தக் கவலைகளைப் போக்க, செயற்கை நுண்ணறிவு நிறைந்த உலகில் ஒருவர் தம் பணியை மேலும் நன்றாகச் செய்ய எவ்வாறு தமது திறன்களை மேம்படுத்தலாம் என்பது குறித்து சிந்திக்கவேண்டும் என்றார் அவர்.
அதனால்தான், தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ பயிற்சித் திட்டங்களில் பங்கேற்கும் சிங்கப்பூரர்கள், குறிப்பிட்ட சில ‘பிரிமியம்’ செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை ஆறு மாதங்களுக்கு இலவசமாகப் பெறலாம் என்று குமாரி இந்திராணி கூறினார்.

