கற்றலின் இடத்தைச் செயற்கை நுண்ணறிவால் ஈடுசெய்ய முடியாது என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார். மாறாக, கற்றலுக்கு அது வழிவகுக்க வேண்டும் என்றார் அவர்.
செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 8) பொங்கோல் வட்டாரத்தில் உள்ள ஓவேசிஸ் தொடக்கப்பள்ளியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் லீ இவ்வாறு கூறினார்.
கல்வி அமைச்சராகப் பதவி ஏற்றதும் பள்ளி ஒன்றுக்கு அவர் நேரில் செல்வது இதுவே முதல்முறை.
அன்றாட பணிகளையும் சவால்மிக்க பணிகளையும் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு பூர்த்தி செய்ய முடியும் என்றபோதிலும் சிந்தித்து முடிவெடுக்கும் தன்மை, அடிப்படை அறிவு போன்றவற்றை இளையர்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் லீ வலியுறுத்தினார்.
சமூகத் திறன்களையும் உணர்வு தொடர்பான திறன்களையும் வளர்த்துக்கொள்ள மாணவர்களுக்கு கல்வி அமைச்சு உதவும் என்றும் அவர் கூறினார்.
மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்ட போட்டித்தன்மையிலிருந்து கற்றல் மீது ஆர்வம் கொண்ட சூழலை அமைப்பதற்கும் முன்னுரிமை தரப்படும் என்றார் அவர்.
வழக்கு தொடர்பான ஆவணங்களைப் புனைய இளம் வழக்கறிஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு உதவக்கூடும் என்றபோதிலும் செயற்கை நுண்ணறிவின் உதவியால் தயாரிக்கப்படும் ஆவணங்களை தகுந்த பயிற்சி, அனுபவம் கொண்ட வழக்கறிஞர்கள் மட்டுமே மேம்படுத்தலாம் என்று அமைச்சர் லீ உதாரணம் காட்டினார்.
செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட எதிர்காலத்துக்குப் பிள்ளைகளைத் தயார் செய்வது முக்கியம் என்றும் அதே சமயத்தில் கற்றல் மீதான ஆர்வம் மற்றும் சமூக உணர்ச்சி திறன்களையும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
வகுப்பறைகளில் வயதுக்குத் தகுந்த செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு முக்கியம் என்று அமைச்சர் லீ கூறினார்.
அத்துடன், செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன என்றும் அதன் வரம்புகள் குறித்தும் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்றார் அவர்.