அரசாங்கத் துறையில் செயற்கை நுண்ணறிவு அவசியம்: கான்

2 mins read
631dec79-77fa-4050-b6dc-5d9ffda2c69c
சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாடு நிலையத்தில் வருடாந்தர அரசாங்கச் சேவைத் தலைமைத்துவ நிகழ்ச்சியில் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் கிம் யோங் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள அனைத்து அரசாங்க ஊழியர்களும் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சியைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.

அரசாங்கச் சேவைத் துறை செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட யுகத்துக்குள் நுழையும் வேளையில் அரசாங்க ஊழியர்கள் அதைப் பொறுப்புடன் பயன்படுத்த தெரிந்துகொள்வது முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கத் துறைத் தலைவர்களும் செயற்கை நுண்ணறிவைத் திறந்த மனத்துடன் தங்கள் பணியில் பயன்படுத்த வேண்டும் என்ற திரு கான், தங்களுக்குக் கீழே உள்ள குழுக்களையும் அவ்வாறே செய்ய அவர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாடு நிலையத்தில் வருடாந்தர அரசாங்கச் சேவைத் தலைமைத்துவ நிகழ்ச்சியில் அரசாங்கச் சேவைத் தலைவர்கள், அதிகாரிகள் என 850க்கும் அதிகமானோரிடம் திரு கான் உரையாற்றினார்.

செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தை உணர்ந்து செயற்கை நுண்ணறிவு யுகத்துக்கு ஏற்ப அரசாங்கச் சேவைத் துறை தன்னை உருமாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் திரு கான் குறிப்பிட்டார்.

அரசாங்கச் சேவைத் துறையில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் அதாவது 150,000 அதிகாரிகள் ‘பேர்’ (Pair) என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஆய்வுக்கும் எழுதுவதற்கும் பயன்படுத்துகின்றனர்.

ஒருசில பணிகளை அதிகாரிகள் இன்றி தன்னிச்சையாகச் செய்து முடிக்க 16,000க்கும் அதிகமான செயற்கை நுண்ணறிவு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவிலும் தரவுகளிலும் வலுவான திறன்களைக் கொண்டிருக்கும் அரசாங்க ஊழியர்கள் மோசடிகளை முன்கூட்டியே கண்டறிந்து இணைய அச்சுறுத்தல்களையும் இணையப் பாதிப்புகளையும் இன்னும் விரைவாகக் கையாள முடியும் என்று திரு கான் சுட்டினார்.

“பெரிய நாடுகள், பொருளியல்களுக்கு இருப்பதைப் போன்ற சக்தி நமக்கு இல்லாமல் போகலாம். ஆனால் விரைவாகச் செயல்படுவதன் மூலம் நமது சிறிய ளவை நமக்குச் சாதகமாக்கிக்கொள்ளலாம்,” என்றார் திரு கான்.

அரசாங்க ஊழியர்கள் புதிய யோசனைகளை ஆராயவும் தயாராக இருக்க வேண்டும் என்று திரு கான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்