தொற்றுநோய்களுக்கு எதிரான போரில் செயற்கை நுண்ணறிவு

தொற்றுநோய்களுக்கு எதிரான போரில் செயற்கை நுண்ணறிவு

2 mins read
069d6cb7-c446-4bbd-a548-037e0643c3c8
செயற்கை நுண்ணறிவு வழங்கும் தரவுகளைப் பயன்படுத்துவதால் பணிச்சுமை, நேரம் குறையும். இதனால் மற்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தலாம் என்று தொற்றுநோய் தடுப்பு நிலையத்தின் தலைமை நிர்வாகி வெர்னான் லீ வலியுறுத்தினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொற்றுநோய்களுக்கு எதிரானப் போரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சிங்கப்பூரின் தொற்றுநோய் தடுப்பு நிலையம் (சிடிஏ) பயன்படுத்தி வருகிறது.

உலகில் மற்றொரு தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து நீடித்து வருகிறது.

இந்நிலையில் தொற்றுநோய்களைக் கண்காணிக்கும் பணிகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து நிலையம் ஆராய்ந்து வருவதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரியான வெர்னான் லீ தெரிவித்தார்.

உலகளாவிய நோய் அறிவிப்புகளை ஆய்வு செய்து, சாத்தியமான நோய் பரவல்களைக் கண்டறிவதிலும் மதிப்பிடுவதிலும் தற்போதைய கண்காணிப்பு உத்திகளுக்கு ஏஐ தொழில்நுட்பம் பக்கபலமாக இருக்கும்.

மேலும், இந்த நோய் பரவல்களுக்கு எதிரான பரிந்துரைகளையும் இந்தத் தொழில்நுட்பத்தால் வழங்க முடியும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) சா சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் துணைப் பேராசிரியருமான லீ குறிப்பிட்டார்.

மரபணு வரிசைமுறை, கழிவுநீர் கண்காணிப்பு உள்ளிட்ட சிடிஏவின் தற்போதைய கண்காணிப்பு தொழில்நுட்பங்களுடன் இந்த ஏஐ திறன்களும் இணைக்கப்படவுள்ளன.

அது மட்டுமல்லாமல் இயற்கை மொழி செயலாக்கம், ‘ஏஜென்டிக் ஏஐ’ போன்ற பிற மேம்பட்ட தொழில்நுட்பங்களையும் இந்த நிலையம் ஆராய்ந்து வருகிறது.

நோய் பரவல் போக்குகளைக் கண்காணிப்பதையும் கணிப்பதையும் மேம்படுத்தி, அதன் மூலம் சரியான நேரத்தில் ஆதாரங்களின் அடிப்படையிலான கொள்கை முடிவுகளை எடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சிடிஏவின் பல்வேறு பணிகளுக்கு மனிதவளம் தொடர்ந்து இன்றியமையாத ஒன்றாக இருக்கும் என்று கூறிய அவர், ஏஐ தொழில்நுட்பம் வழங்கும் தரவுகளைப் பயன்படுத்துவதால் ஊழியர்கள் பகுப்பாய்விலும் கொள்கைகளை உருவாக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட இத்தொழில்நுட்பம் வழிவகுக்கும் என்றார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் சிங்கப்பூரின் நான்கு தேசிய ஏஐ திட்டங்களில் ஒன்றாகச் சுகாதாரத் துறை அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து லீயின் கருத்துகள் வெளிவந்துள்ளன.

சிடிஏ அமைப்பு தொடங்கப்பட்டு ஓராண்டு ஆன நிலையில் நொவீனா ஸ்கொயரில் உள்ள அதன் அலுவலகத்தில் ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் திரு லீ இந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்