மக்களின் கருத்துகளைக் கணிக்கும் செயற்கை நுண்ணறிவு

மக்களின் கருத்துகளைக் கணிக்கும் செயற்கை நுண்ணறிவு

2 mins read
6629b026-2b3d-48b0-8e1a-76fecc123835
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கணக்கீட்டு சமூக அறிவியல், மானுடவியல் நிலையத்தின் துணை இயக்குநர் மிகுவெல் எஸ்கோபார் வாரெலா (வலம்), இணை இயக்குநர் அட்ரேயி கன்கன்ஹாலி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ளூர்க் கொள்கைகள் மக்களிடையே அறிமுகப்படுத்துவற்கு முன்பு அது பற்றிய மக்களின் எண்ணங்களையும் கருத்துகளையும் முன்கூட்டியே கணிக்கும் வகையில் ஒரு தளம் உருவாக்கப்படுகிறது.

அது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

‘எல்எல்எம்’ எனப்படும் பெருமொழி மாதிரிகள் மூலம் இயக்கப்படும் செயற்கை நுண்ணறிவு பெரிய அளவிலான உரைகளை பகுப்பாய்வு செய்து உள்ளடக்கங்களை உருவாக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியத்தை பேணிக்காத்தல், சுகாதாரம், நீடித்த நிலைத்தன்மை போன்ற திட்டங்கள் மக்களிடையே எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது முன்கூட்டியே இதன்வழி கண்டறியப்படும்.

ஐந்து ஆண்டுகால இம்முயற்சி இவ்வாண்டு ஜூலை மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் 1970களுக்கு முந்தையக் காலகட்டத்தில் ஜாவியில் எழுதப்பட்ட மலாய் மொழி நாளேடுகளை மொழிபெயர்க்கவும் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவிருக்கிறது. இம்முறையில் பாதுகாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பக்கங்களில் மலாய் சொற்களைப் பயன்படுத்தி தேடும் வகையில் மொழிமாற்றம் செய்யப்படும். இதனால் வரலாற்றின் குறிப்பிடத்தக்க பகுதிகளை பாதுகாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டங்கள், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் புதிய நிலையமான கணக்கீட்டு சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் (சிஎஸ்எஸ்எச்) தீட்டியிருக்கும் 50க்கும் மேற்பட்ட திட்டங்களில் சில.

கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி அந்தப் புதிய நிலையம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

மனிதகுலம் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் அதிகரித்து வருவதால் பல துறைகளுக்கு இடையிலான ஆய்வுகள் அவசியமாகி வருகின்றன.

சிஎஸ்எஸ்எச் நிலையத்தின் இணை இயக்குநரான பேராசிரியர் கன்கன்ஹாலி, பல துறைகளின் பணிகளை நிலையம் ஒருங்கிணைக்கும் என்று குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் (SMU), ஏஸ்டார் ஆகியவை 2022ஆம் ஆண்டில் ஒரு ஆய்வுக் கூடத்தை அமைத்தன. இதில் சிங்கப்பூர் எதிர்கொள்ளும் அதிக முன்னுரிமை கொண்ட தேசிய சவால்களை, குறிப்பாக மூப்படையும் மக்கள்தொகை போன்றவற்றைச் சமாளிக்க ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்