தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பரிந்துரைக்கும் செயற்கை நுண்ணறிவு நடுவம்

2 mins read
88087c94-c35e-49f2-9b2e-4b7266201826
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சங்கமும் இளம் யங் பிஎபி எனும் மக்கள் செயல் கட்சியின் இளையர் பிரிவும் செயற்கை நுண்ணறிவால் எழும் சவால்கள் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளன.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்ளும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் முழுமையாகச் சேவை வழங்கும் செயற்கை நுண்ணறிவு நடுவம் மூலம் பயனடையலாம்.

ஒரே கூரையின் கீழ் அனைத்துச் சேவைகளும் கிடைக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு ஆலோசனை நிலையம் செயற்கை நுண்ணறிவுக் கட்டுப்பாடுகள், மானிய விண்ணப்பங்கள் ஆகியவற்றுடன் செயற்கை நுண்ணறிவுத் தளத்தையும் வழங்கலாம்.

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சங்கமும் மக்கள் செயல் கட்சியின் இளையர் பிரிவும் ஏப்ரல் 4 வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் செயற்கை நுண்ணறிவு நடுவத்துக்கான பரிந்துரையும் ஒன்று.

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்வதற்கான முட்டுக்கட்டைகளைக் குறைக்கவும் பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்கான வாழ்க்கைத்தொழில் பாதையை உருவாக்கவும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் ஐந்து பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களின் திறனை வளர்ப்பது, செயற்கை நுண்ணறிவை இயக்கி தரவுகளைப் புரிந்துகொள்வது, சிறிய, மிகச் சிறிய வர்த்தகங்களுக்கு செயற்கை நுண்ணறிவு ஆற்றல் கொண்ட கட்டுபடியான தீர்வுகளை உண்டாக்குவது ஆகியவையும் பரிந்துரைகளில் அடங்கும்.

உற்பத்தித் திறன்மீது செயற்கை நுண்ணறிவு கொண்டுள்ள தாக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சிங்கப்பூரின் 23 தொழிற்துறை உருமாற்றத் திட்டங்களை மாற்றியமைக்கும்படியும் வெள்ளை அறிக்கை கோரிக்கை விடுத்துள்ளது.

சிறிய, நடுத்தர வர்த்தகங்கள் சங்கம் வெள்ளை அறிக்கையை இம்மாதம் 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றது.

அதன் மூலம் செயற்கை நுண்ணறிவால் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு வரும் சவால்கள் பற்றி அமைச்சர்கள் கூடுதலாகப் புரிந்துகொள்ள முடியும் என்று சங்கம் சொன்னது.

குறிப்புச் சொற்கள்