சிங்கப்பூரில் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவுமீதான ஆர்வம் அதிகரித்து வருவதை புதிதாக வெளியிட்ட ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் தரவு அறிவியல் போன்றவற்றில் இணையவழிக் கற்றல் உலகளவில் எந்த அளவுக்கு திறன் வளர்ந்துள்ளது என்பதை அளவிடும் குறியீடு அந்த அறிக்கையில் இடம்பெற்று உள்ளது.
இணையப் பாட வகுப்புகளை நடத்தும் கோர்செரா (Coursera), உலகின் 109 நாடுகளில் ஆய்வு நடத்தி திறன் அளவீட்டுக் குறியீட்டை வெளியிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவில் திறன்பக்குவத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதற்கு அடுத்த நிலையில் டென்மார்க்கும் மூன்றாவது இடத்தை சுவிட்சர்லாந்தும் பிடித்துள்ளன.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடங்களைக் கற்க தனது நிறுவனத்தில் சேர்ந்துள்ளோரின் திறன்களுடன் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி முடிவுகளையும் அனைத்துலகப் பண நிதியத்தின் செயற்கை நுண்ணறிவு ஆயத்தநிலைக் குறியீட்டுத் தரவுகளையும் கோர்செரா ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கவும் அவற்றைக் கடைப்பிடிக்கவும் உலக நாடுகள் எந்த அளவுக்குத் தயாராக உள்ளன என்பதை வெளிப்படுத்தும் குறியீடு அது.
கோர்செரா வெளியிட்டுள்ள குறியீட்டுப் பட்டியல் குறித்து, சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு தேசியத் திட்டத்தின் மூத்த இயக்குநர் பேராசிரியர் சைமன் செஸ்டர்மன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவைக் கற்றுக்கொள்வதில் சிங்கப்பூரர்களிடையே பேரார்வம் காணப்படுவதை அறிக்கை வெளிப்படுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
செயற்கை நுண்ணறிவில் சிங்கப்பூர் சிறந்து விளங்க ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் (SSG) போன்ற அரசாங்க உத்திகளும் ஒரு காரணம் என்றார் அவர்.
மேலும், நன்கு படித்தவர்கள், ஒருவரோடு ஒருவர் சிறந்தமுறையில் தொடர்புகொள்ளும் மக்கள்தொகை போன்றவை பிற காரணங்கள் என்றும் திரு சைமன் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு தேசியத் திட்டம், சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை ஊக்குவிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது.
சிங்கப்பூரின் கோர்செராவில் கிட்டத்தட்ட 107,000 பேர் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவுப் பாடங்களைக் கற்கின்றனர். அவர்களில் 44,000 பேர் கடந்த ஆண்டு புதிதாகச் சேர்ந்தனர்.