செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) ‘தன்னாட்சி’ பண்புதான் உதவியாகவும், அதேநேரத்தில் அபாயங்களுக்குக் காரணமாகவும் அமைகிறது என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.
ஆதலால், அதற்கு எதிர்வினையாற்றுவதைவிட, அதனை முறைப்படுத்த முன்கூட்டியே தயாராவதே சிறந்த வழி என்று அமைச்சர் கூறினார்.
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் குறித்த அனைத்துலக மாநாட்டில் பங்கேற்றபோது திருவாட்டி டியோ இவ்வாறு குறிப்பிட்டார்.
பிப்ரவரி 20ஆம் தேதியன்று நடந்த ‘தன்னாட்சிக் கருவிகளின் தாக்கங்களைக் கண்காணிக்கத் தயாராதல்: பாதுகாப்பான, நம்பகமான செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய உறுதிப்பாட்டு இடைவெளியைக் குறைத்தல்’ எனும் அமர்வில் கலந்துகொண்டு அவர் பேசினார்.
“ஏஐ கருவிகளைப் பயன்படுத்துவதில் அரசாங்கம் முன்மாதிரியாக இருக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
“அத்தகைய தீர்வுகளின் துணையுடன் பொதுச் சேவைகளை எவ்வாறு மேம்படுத்துவது என ஆராய வேண்டும். அதே வேளையில், கூடுதல் கட்டுப்பாடுகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும்,” என்று அமைச்சர் டியோ கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூரில் ‘ஏஐ’ கருவிகளைப் பொறுப்புடன் பயன்படுத்துவதற்கும் அபாயங்களைக் குறைப்பதற்கும் ஆதரவளிக்கும் ‘மாதிரி நிர்வாகக் கட்டமைப்பு’ அமைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுக்கான உறுதியான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், அதனை உருவாக்கத் தேவையான மூன்று முக்கியக் கூறுகளையும் கோடிட்டுக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
கருவிகளின் பயன்பாட்டு நம்பகத்தன்மைக்கான சோதனை, பாதுகாப்புத் தரநிலைகள், சோதனையாளர், தணிக்கையாளர் போன்ற மூன்றாம் தரப்பு உறுதிப்பாட்டு வழங்குநர்கள் ஆகியவை அவசியம் என்றும் அக்கட்டமைப்பை நோக்கி சிங்கப்பூர் விரைவாக நடைபோட்டுக்கொண்டுள்ளது என்றும் திருவாட்டி டியோ கூறினார்.
தொடர்ந்து, உலகளாவிய ஏஐ சூழல் குறித்த கலந்துரையாடலிலும் அவர் பங்கேற்றார்.
இம்மாநாட்டுக்கு முன்னதாக, இந்தியா, கனடாவுடன் இணைந்து ‘அறிவியல் பணிக்குழு’விற்குச் சிங்கப்பூர் தலைமை தாங்கியது.
அதன் ஒரு பகுதியாக, ஏஐ உதவியுடன் நடைபெறும் கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்தும் ஆர்வமுள்ள பங்காளிகளை இணைக்க ‘அறிவியல் நிலையங்களுக்கான ஏஐ கட்டமைப்பு’ எனும் தளத்தை நிறுவ மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனிடையே, ‘ஏஐ பாதுகாப்பு குறித்த அனைத்துலக அறிவியல் பரிமாற்றம் மே மாதம் சிங்கப்பூரில் நடைபெறும் என்று அமைச்சர் டியோ அறிவித்துள்ளார்.
ஏஐ தாக்கம் குறித்த அனைத்துலக மாநாடு
பல்வேறு கண்டுபிடிப்பாளர்கள், நிறுவனங்கள், தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் பொது நிறுவனங்களை இணைக்கும் ஏஐ தாக்கம் தொடர்பான மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது.
ஏறத்தாழ 20 நாடுகளின் தலைவர்கள், கூகல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ‘ஓப்பன் ஏஐ’ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன், ‘ஆந்த்ரோபிக்’ நிறுவனத்தின் டாரியோ அமோடை, ‘கூகல் டீப் மைண்ட்’ நிறுவனத்தின் டெமிஸ் ஹசாபிஸ் உள்ளிட்ட 40 தலைமை நிர்வாக அதிகாரிகள் அம்மாநாட்டில் பங்கேற்றனர். லண்டன், தென்கொரியா, பிரான்ஸ் மாநாடுகளைத் தொடர்ந்து நடைபெற்ற நான்காவது மாநாடு இது. உலகின் தென்பகுதியில் நடத்தப்பட்ட ஆகப்பெரிய மாநாடாகவும் இது கருதப்படுகிறது.

