2027 இறுதிக்குள் 50% பாடங்களில் செயற்கை நுண்ணறிவுத் திறன்களைப் புகுத்த உறுதி

செயற்கை நுண்ணறிவு: முன்னோடி நிறுவனங்களுடன் கைகோக்கும் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி

3 mins read
62e02a7e-50e8-4433-b9a6-33f3b9eed1bd
கல்வி, மேம்பாட்டு மைய இயக்குநர் வீரப்பன் கிரிஜா (வலது), செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு, பகுப்பாய்வுத் துறை மாணவி பாலு விஜயலட்சுமி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கற்றல், கற்பித்தல் முறைகளை மேம்படுத்தவும் மாறிவரும் தொழில்துறைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏதுவாகவும் புதிய செயற்கை நுண்ணறிவு உத்திகளை ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி அறிமுகம் செய்துள்ளது.

ஆசிரியர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான பயிற்சிகளுடன் அடுத்த ஆண்டிறுதிக்குள் (2027) அனைத்து பட்டயப் படிப்புகளிலும் துறை தொடர்பான பாடங்களில் 50 விழுக்காடு செயற்கை நுண்ணறிவுத் திறன்கள் புகுத்தப்படும் என்று அக்கல்லூரி உறுதியளித்தது.

இந்தச் செயற்கை நுண்ணறிவுத் திறன்கள் முழுநேரம், பகுதிநேரம் என அனைத்துப் பாடங்களிலும் செயல்படுத்தப்படும். மேலும், ஏஐ சிங்கப்பூர், ஆட்டோடெஸ்க், மைக்ரோசாஃப்ட், என்விடியா, எஸ்டி எஞ்சினியரிங் ஆகிய முன்னோடி நிறுவனங்கள் கல்லூரியுடன் பங்காளிகளாக இணைந்துள்ளன.

சான்றிதழ் படிப்புகள் தொடங்கி, வேலைப் பயிற்சி போன்ற பல்வேறு அம்சங்களில் இவை மாணவர்களுக்கு ஆதரவாக அமையும்.

முதற்கட்டமாக அனைத்துத் துறைகளையும் சேர்ந்த 1,200 ஆசிரியர்கள் இவ்வாண்டில் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி மேற்கொள்வர் என்று கல்லூரி நிர்வாகம் கூறியது.

இந்த உத்தி, கற்பித்தலை மேம்படுத்த ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவைச் சிறந்த முறையில் பயன்படுத்துவது, பணிகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த மாணவர்களைத் தயார்ப்படுத்துவது என இரு அம்சங்களில் கவனம் செலுத்தும்.

செயற்கை நுண்ணறிவு உத்திகள் அதிகாரத்துவ அறிமுகம்

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் செயற்கை  நுண்ணறிவு உத்திகளை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ.
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு உத்திகளை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ. - படம்: லாவண்யா வீரராகவன்

செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான பாடங்கள் வெவ்வேறு துறைகளில் வெவ்வேறு அளவுகளில் செயல்பாட்டில் இருந்தாலும், துறை நிறுவனங்களின் ஆதரவுடன், ஒருங்கிணைந்த அணுகுமுறையாகச் செயல்படுவதற்கான உத்தி வியாழக்கிழமை (ஜனவரி 8) அறிமுகம் கண்டது.

இந்த அறிமுக நிகழ்ச்சி, ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரித் தொழில் மைய வளாகத்தில் நடைபெற்றது. கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இதனைத் தொடங்கி வைத்தார்.

செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு நாட்டின் முக்கியத் தேவைகளில் ஒன்று என்று கூறிய அவர், பொருளியல், பொதுத்துறை, பாதுகாப்பு என அனைத்துத் துறைகளிலும் உற்பத்தித் திறனை அதிகரித்து மாற்றத்தை உருவாக்க அது அவசியம் என்று குறிப்பிட்டார். அதன் தொடர்பில் தேசிய செயற்கை நுண்ணறிவு உத்தி 2.0 செயல்படுவதைச் சுட்டினார்.

“சரியான முறையில் பயன்படுத்தினால் செயற்கை நுண்ணறிவு மனித ஆற்றலை மேம்படுத்தி, வேகமாகவும் சிறப்பாகவும் செயல்பட உதவும். இது போட்டித்தன்மையை ஊக்குவித்து, அதிக வாய்ப்புகளைப் பெறவும் வழிவகுக்கும்,” என்றார் அமைச்சர்.

கல்வி அமைச்சு, செயற்கை நுண்ணறிவு குறித்துக் கற்பது, செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டைக் கற்பது, செயற்கை நுண்ணறிவுடன் கற்பது, செயற்கை நுண்ணறிவுக்கு அப்பாலும் கற்பது என நான்கு அம்சங்களைக் கருத்தில்கொண்டு எதிர்காலத்துக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துவதாக அவர் சொன்னார்.

சிங்கப்பூரின் மனித வளத்தைச் சாதகமாக முன்னிறுத்தி, அனைத்து சிங்கப்பூரருக்கும் நல்ல வேலை வாய்ப்புகளைத் தக்க வைக்க விரும்புவதாகவும் திரு டேவிட் நியோ தெரிவித்தார்.

அதற்கு, ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி போன்ற உயர்கல்விக் கழகங்களின் ஒத்துழைப்பு முக்கியம் என்றார் அவர்.

“கல்விக்கும் தொழில்துறைக்குமான இடைவெளியைக் குறைத்து மாணவர்களை வேலைக்குத் தயார்செய்யத் துறைப் பங்காளிகளுடன் கைகோத்திருப்பது சிறப்பு,” என்று அமைச்சர் கூறினார்.

புதிய உத்தி குறித்த கருத்துகள்

“கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்வித் துறையில் செயல்படுகிறேன். கல்வித்துறை மிகவும் மாற்றம் கண்டுள்ளது. திறன்பேசி அனைத்துக் கேள்விகளுக்கும் விடை சொல்லிவிடுகிறது. ஆனால், அதனைச் சரியான முறையில் பயன்படுத்துவதை நெறிமுறைப்படுத்துவது ஆசிரியர்களின் பொறுப்பு,” என்றார் கல்லூரியின் கல்வி, மேம்பாட்டு மைய இயக்குநர் வீரப்பன் கிரிஜா.

ஆசிரியர்களும் அவர்களை மேம்படுத்திக்கொள்வது அவசியம். இந்தக் கட்டமைப்பு, மேம்பாடு காணவேண்டிய அம்சங்களை அடையாளம் கண்டு பயிற்சியளிக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

கற்பித்தலுக்கு அப்பால் நிர்வாகப் பணிகளும் ஆசிரியர்களுக்கு இருக்கும் என்பதைச் சுட்டிய திருவாட்டி கிரிஜா, “செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைச் சரியாகப் பயன்படுத்தினால், அப்பணிகளில் செலவிடும் நேரம் குறைந்து, மாணவர்களுக்காகச் செலவிடும் நேரம் அதிகரிக்கும்,” என்றார்.

“செயற்கை நுண்ணறிவு வாழ்க்கையின் அங்கமாக உள்ளது. பள்ளிக்காலம் முதலே அதனைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். அதனை மேலும் சிறப்பான முறையில் பயன்படுத்தக் கற்றுக்கொள்வது அவசியம்,” என்றார் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி பாலு விஜயலட்சுமி, 17.

செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு, பகுப்பாய்வுத் துறையில் பட்டயக் கல்வி பயிலும் இவர், “பிற்காலத்தில் செயற்கை நுண்ணறிவு பல வேலைகளை எடுத்துக்கொள்ளும் என்கின்றனர். எங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள இது உதவும் என நம்புகிறோம்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்