1,000 சிறுவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி

1,000 சிறுவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி

2 mins read
eff4047d-d01f-437c-9f13-3d904c48d5c1
‘மை டிஜிட்டல் பூட்கேம்ப்: ஏஐ எடிஷன்’ தொடக்க விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள். - படம்: மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றம்
Google News Preferred Icon

மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றமும் யுஓபி வங்கியும் இணைந்து ‘மை டிஜிட்டல் பூட்கேம்ப்: ஏஐ எடிஷன்’ எனும் திட்டத்தின் ஐந்தாவது பதிப்பைத் தொடங்கியுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் மத்திய சிங்கப்பூர் வட்டாரத்தைச் சேர்ந்த 1,000 சிறுவர்கள் பயன்பெறுவார்கள்.

குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு செய்முறை வழி மின்னிலக்கக் கற்றலில் ஈடுபடவும் புதியனவற்றைப் படைக்கவும் பரிசோதனை செய்யவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வாய்ப்பளிக்கும் வகையில் ‘மை டிஜிட்டல் பூட்கேம்ப்’ திட்டம் 2019ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இத்திட்டமும் உருமாற்றம் பெற்று வந்துள்ளது.

ஐந்தாவது பதிப்பிற்காக யுஓபி வங்கி இத்திட்டத்திற்கு மேலும் $500,000 வழங்க உறுதியளித்துள்ளது. இதன் மூலம் 2019ஆம் ஆண்டிலிருந்து அவ்வமைப்பின் மொத்த பங்களிப்பு $3 மில்லியன் உயர்ந்துள்ளது. இக்கூடுதல் நிதி உதவி, மேலும் 1,000 சிறுவர்களைச் சென்றடைய உதவுவதோடு, வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பச் சூழலில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய, வயதுக்கேற்ற கற்றல் அனுபவங்களை அறிமுகப்படுத்தவும் துணைபுரியும்.

ஹவ்காங் தொடக்கப்பள்ளியில் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) நடைபெற்ற தொடக்க விழாவில், தற்காலிக மனிதவள அமைச்சர் திருவாட்டி ஜாஸ்மின் லாவ் ஐந்தாவது பதிப்பைத் தொடங்கி வைத்தார். மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் திருவாட்டி டெனிஸ் புவா, யுஓபி அறக்கட்டளையின் தலைவர் திருவாட்டி ஜெனட் யங் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

செப்டம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் இருநாள் ஆரம்பப் பயிற்சி முகாமில் நான்காம், ஐந்தாம் வகுப்புகளில் பயிலும் ஏறத்தாழ 100 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

தொடக்க விழாவின் ஒரு பகுதியாக, ‘காவ்டெக் சிங்கப்பூர்’ அமைப்பின் இரண்டு இயந்திர மனிதர்கள் சிறப்பு அம்சமாகக் காட்சிப்படுத்தப்பட்டன. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை மாணவர்கள் நேரடியாகக் கண்டறிய இது வாய்ப்பளித்தது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித இயந்திரவியல் துறையின் சாத்தியக்கூறுகளையும் புதிய தொழில்நுட்பங்கள் உலகை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதையும் மாணவர்கள் இவை மூலம் புரிந்துகொள்ள முடிந்தது. இந்த இயந்திர மனிதர்கள் தொடக்க விழா சிறப்பு அம்சத்துக்காக மட்டுமே கொண்டு வரப்பட்டன. இவை ஐந்தாம் பதிப்பின் பாடத்திட்டத்தில் இடம்பெறவில்லை.

“தொழில்நுட்பம் மிக வேகமாக மாறி வருகிறது. மின்னிலக்கத் திறன்களும் செயற்கை நுண்ணறிவும் கற்றல், வேலை மற்றும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும் உலகில் நமது குழந்தைகள் வளரப்போகிறார்கள். பின்னணி எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு குழந்தையும் இளம் வயதிலேயே தொழில்நுட்பத்தை ஆராயவும் செய்முறை அனுபவங்கள் மூலம் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பு பெற வேண்டும். ‘மை டிஜிட்டல் பூட்கேம்ப்’ போன்ற திட்டங்கள், குழந்தைகள் சோதித்துப் பார்க்கவும் புதியவற்றைப் படைக்கவும் தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகளைக் கண்டறியவும் வழிவகுக்கின்றன. அதோடு, மாறிவரும் உலகத்தை எதிர்கொள்ளத் தேவையான ஆர்வம், படைப்பாற்றல், தகவமைப்புத் திறன் ஆகியவற்றையும் வளர்க்கின்றன,” என்று நிகழ்வில் உரையாற்றிய தற்காலிக மனிதவள அமைச்சர் திருவாட்டி ஜாஸ்மின் லாவ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுபயிற்சிமாணவர்கள்