நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒப்படைப்புகளைச் செய்த மூன்று மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
பாடங்களில் இல்லாத பின்குறிப்புகளுடன் தவறான புள்ளிவிவரங்கள், போலியான இணையப்பக்கங்கள் போன்றவை ஒப்படைப்புகளில் காணப்பட்டதால் மாணவர்கள் கல்வி முறைகேட்டுக்காகவும் கண்டிக்கப்பட்டனர் என்று பல்கலைக்கழகம் கூறியது.
சுகாதாரம், தொற்றுநோய் பரவல், அரசியல் ஆகிய பாடங்களை மேற்கொண்ட மூன்று மாணவர்களும் ஏப்ரலில் விசாரிக்கப்பட்டனர். முறையான மறுஆய்வில் மாணவர்கள் அவர்களின் ஒப்படைப்புகளை விளக்க வாய்ப்பளிக்கப்பட்டது.
அவர்களில் இருவர் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டனர். மூன்றாவது மாணவர் தாங்கள் பயன்படுத்திய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சரியில்லாத ஒன்று என்பதை அறிந்திருக்கவில்லை என்றார்.
பாடத்திட்டத்தின் ஆசிரியர் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு பாடங்களைச் செய்யக்கூடாது என்று மாணவர்களுக்குத் தெரிவித்திருந்ததாகப் பல்கலைக்கழகப் பேச்சாளர் சொன்னார்.
அவ்வாறு செய்யும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது என்று பலமுறை நினைவூட்டப்பட்டது என்ற அவர், அதிகாரபூர்வமாக அது மூன்று மாணவர்களிடமும் தெரிவிக்கப்பட்டது என்றார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்கள் பாடங்களை முடிக்க செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், அவர்கள் கல்விசார் நேர்மை, திருட்டு போன்ற விதிமுறைகளை மீறக்கூடாது.
தொடர்புடைய செய்திகள்
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்பட ஆறு தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களும் அந்த நிலைப்பாட்டை ஏற்றுள்ளன.