பேருந்து சக்கரங்களை (டயர்) சோதனை செய்ய எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது.
இதற்கு முன்பு, இப்பணியைப் பேருந்து பராமரிப்பு ஊழியர்கள் சுயமாகச் செய்தனர். இதனால் சக்கரங்களைச் சோதனையிடும் பணியைச் செய்து முடிக்க நீண்ட நேரம் எடுத்தது. மேலும், உடல் உழைப்பு அதிகம் தேவைப்பட்டது.
பேருந்துக்கு அடியில் சென்று ஊழியர்கள் சக்கரங்களைச் சோதனையிட வேண்டி இருந்தது.
ஆனால் தற்போது செயற்கை நுண்ணறிவின் உதவியால் இப்பணியை சில நிமிடங்களிலேயே முடித்துவிடலாம்.
இந்தப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் கருவி 2023ஆம் ஆண்டு மே மாதம் பொருத்தப்பட்டது.
புதிய அணுகுமுறை நடப்புக்கு வருவதற்கு முன்பு ஒவ்வொரு பேருந்தில் உள்ள ஆறிலிருந்து எட்டு சக்கரங்களைச் சோதனையிட அரை மணி நேரத்திலிருந்து 40 நிமிடங்கள் எடுக்கும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட்டில் தொழில்நுட்ப அதிகாரியாகப் பணியாற்றும் திரு ராஜேஷ்பால் சிங் கூறினார்.
செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் சக்கரங்கள் தானியக்க முறையில் சோதனையிடப்படுகின்றன. சக்கரங்களின் நிலை தொடர்பான அறிக்கை ஒரு சில நிமிடங்களில் தயாராகிவிடும்.
இவ்வாண்டு இறுதிக்குள் சிலேத்தார் பேருந்துப் பணிமனையில் புதிய சக்கரச் சோதனை இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், செப்டம்பர் 12ஆம் தேதியன்று அந்தப் பணிமனைக்குச் செய்தியாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அங்கு அவர்களிடம் 39 வயது திரு சிங் பேசினார்.
உலு பாண்டான் பேருந்துப் பணிமனையிலும் புதிய இயந்திரம் பயன்படுத்தப்படும்.
பிடோக் நார்த் பேருந்துப் பணிமனையில் இந்த இயந்திரம் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது.
சக்கரம் சோதனையிடும் முறை துரிதமாக நடந்தேற புதிய இயந்திரம் உதவுவதாக எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் குழுமத் தலைவர் நிர்வாகி திரு ஜெஃப்ரி சிம் தெரிவித்தார்.
பேருந்துப் பராமரிப்பு ஊழியர்களின் வேலைப் பளுவையும் அது குறைத்துள்ளது. கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான பேருந்துகள் அங்கு பராமரிக்கப்படுகின்றன. எஸ்பிஎஸ் டிரான்சிட் மொத்தம் 3,329 பொதுப் பேருந்துகளை இயக்குகிறது.

