மேடை அதிரும் வண்ணமயமான நிகழ்ச்சிகளைப் படைக்கத் தயாராகும் கலைஞர்கள்

தேசிய தின அணிவகுப்புக் கலை நிகழ்ச்சிகளுக்கான தயாரிப்புகள் மும்முரம்

மேடை அதிரும் வண்ணமயமான நிகழ்ச்சிகளைப் படைக்கத் தயாராகும் கலைஞர்கள்

3 mins read
ba403352-66ef-4c12-bfce-00c63e9362cb
தேசிய தின அணிவகுப்பில் கலை நிகழ்ச்சிகள் படைக்கவுள்ள கலைஞர்கள், ஏற்பாட்டுக் குழுவினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பல்லினக் கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையில் கலைஞர்கள் 36 பேருடன் பங்கேற்பாளர்கள் 2,600 பேர் இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பில் வண்ணமயமான, துடிப்பான நிகழ்ச்சிகளைப் படைக்கவுள்ளனர்.

இம்முறை புதுமுகங்கள் பலர் நிகழ்ச்சிகளைப் படைக்கவுள்ளனர். புதிய நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மூவர் உட்பட 24 பேர் இவ்வாண்டு புதிதாக மேடையேறுவர்.

‘தொடுவானம் நோக்கி’ எனும் கருப்பொருளில் அரங்கேறவுள்ள தேசிய தின அணிவகுப்புக்கான ஏற்பாடுகளும் பயிற்சிகளும் தீவிரமான நடைபெற்று வரும் நிலையில், செய்தியாளர்களுக்கு இதில் இடம்பெறும் கலை நிகழ்ச்சிகளின் முன்னோட்டம் ஜூலை 2ஆம் தேதியன்று காட்சிப்படுத்தப்பட்டது.

தேசிய தின அணிவகுப்பில் அரங்கேறவுள்ள ஓர் இசை, நடன நிகழ்ச்சியைப் படைக்கும் குழுவினர்.
தேசிய தின அணிவகுப்பில் அரங்கேறவுள்ள ஓர் இசை, நடன நிகழ்ச்சியைப் படைக்கும் குழுவினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விதவிதமான, அழகிய நிகழ்ச்சிகளுக்கு வழிவகுக்கும் நோக்கில், அம்புக்குறி வடிவில் இம்மேடை அமைக்கப்பட்டுள்ளது. 162 மீட்டர் நீளமும், 74 மீட்டர் அகலமும் கொண்ட மேடையில் நிகழ்ச்சிகள் அரங்கேறவுள்ளன.

மொத்தம் 170 வண்ணச் சுடர்விடும் கருவிகள், நான்கு ‘ஐமேக்ஸ்’ திரை அளவிலான காட்சித் திரைகள், 1,600 அசையும் விளக்குகள், 50 ‘லேசர்’ ஒளிக்கற்றைகள் பயன்படுத்தவிருக்கின்றன. அத்துடன் ஏறத்தாழ 300 ஆளில்லா வானூர்திகள் படைக்கும் உள்ளரங்கக் காட்சியும் இதில் இடம்பெறும்.

ஆறு அங்கங்கள் கொண்ட மேடை நிகழ்ச்சிகள்

கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும் தேசிய தின அணிவகுப்புக்கான கலை நிகழ்ச்சிகள் ஆறு அங்கங்களாகப் (Chapter) பிரிக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் தேசியப் பற்றுறுதியின் அறுபதாமாண்டைக் கொண்டாடும் நிலையில் அதன் முக்கியத்துவத்தைப் பறைசாற்றும் அங்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கும்.

தேசிய தின அணிவகுப்பில் அரங்கேறவுள்ள ஒரு நடன நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சி.
தேசிய தின அணிவகுப்பில் அரங்கேறவுள்ள ஒரு நடன நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘தம்மைக் கடந்து - தொடுவானம் நோக்கி’ (Go Beyond Self), ‘இயல்பைக் கடந்து - தொடுவானம் நோக்கி’ (Go Beyond The Ordinary), ‘அளவைக் கடந்து - தொடுவானம் நோக்கி’ (Go Beyond Our Size), ‘நேரத்தைக் கடந்து - தொடுவானம் நோக்கி’ (Go Beyond Time), ‘வரம்புகளைக் கடந்து - தொடுவானம் நோக்கி’ (Go Beyond Our Limits), ‘ஒன்றாக - தொடுவானம் நோக்கி’ (Go Beyond, Together) எனும் ஆறு அங்கங்களில் இந்நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

இவற்றில் பல்லினப் பாரம்பரிய இசை, கலாசாரம், நடனம், குறுநாடகங்கள் இடம்பெறும்.

புதிய கலைஞர்கள்

இந்நிகழ்ச்சியில் முதன்முறையாகத் தொகுப்பாளராக இணைந்துள்ளார் உதய சௌந்தரி.

“தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கவேண்டும் எனும் நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது. இந்த வாய்ப்புக்கான அழைப்பு வந்தபோது நம்பமுடியாத அளவு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தேன். உடன் தொகுத்து வழங்குவோரும் ஆதரவாக அமைந்துள்ளனர்,” என்றார் உற்சாகம் ததும்பப் பேசிய உதய சௌந்தரி.

“அணிவகுப்பில் உள்ளது போலவே நிகழ்ச்சித் தொகுப்பு, கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டுள்ளன,” என்ற அவர் இந்த முன்னோட்டக் காட்சிகளைவிடப் பல நூறு மடங்கு அதிக உற்சாகம் நிகழ்ச்சியில் இருக்கும் என நம்புவதாகவும், நிகழ்ச்சி நாளை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்வாண்டு புதிதாக இணைந்துள்ள மூன்று கலைஞர்கள். (இடமிருந்து) நடனக் கலைஞர் ‌ஷ்ருதி நாயர், தொகுப்பாளர்  உதய செளந்தரி, இசைக்கலைஞர் சு‌ஷ்மா சோமா.
இவ்வாண்டு புதிதாக இணைந்துள்ள மூன்று கலைஞர்கள். (இடமிருந்து) நடனக் கலைஞர் ‌ஷ்ருதி நாயர், தொகுப்பாளர் உதய செளந்தரி, இசைக்கலைஞர் சு‌ஷ்மா சோமா. - படம்: சாவ் பாவ்

தேசிய தின நிகழ்ச்சிகளின் மூன்றாமங்கத்தில் பாடுகிறார் சு‌ஷ்மா சோமா.

“பாரம்பரிய கர்நாடக இசை, இவ்வளவு பெரிய மேடையிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கவில்லை. பல்லினக் கலைஞர்களுடன் இணைந்து படைக்கும் நிகழ்ச்சியில் இரண்டு நிமிடங்கள் நான் பாடுகிறேன்,” என்று புன்னகையுடன் கூறினார் சு‌ஷ்மா.

பயம், மிரட்சி, மகிழ்ச்சி, பெருமை எனக் கலவையான உணர்வுடன் இருப்பதாகக் குறிப்பிட்ட சு‌ஷ்மா, “இத்துணை பெரிய நாட்டில் நமது சிறு பங்கை நினைக்கும்போது, அடக்கமும் இணைந்தே தோன்றுகிறது,” என்றார்.

பல்லினக் கலைஞர்கள், குறைபாடுள்ள கலைஞர்கள் இருவருடன் இணைந்து நடன நிகழ்ச்சி படைக்கவுள்ளார் ‌ஷ்ருதி நாயர், 29.

கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ள சிறுவர்கள்.
கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ள சிறுவர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“நான் 24 ஆண்டுகளாக நடனம் பயில்கிறேன். தேசிய தின அணிவகுப்பில் பங்களிப்பது முதன்முறை. தனித்துவமான நிகழ்ச்சிகளைப் படைக்கும் பலருடன் மேடையைப் பகிர்வது பெருமை,” என்றார் அவர்.

சிறப்பான முறையில் நிகழ்ச்சியைப் படைக்க வேண்டும் எனும் எண்ணத்துடன் இருப்பதாகக் கூறிய அவர், “அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக, குறைபாடுள்ளோரை ஏற்று நடத்துவதுடன், அவர்களின் திறமைகளைக் கொண்டாடுவதும் அவசியம். அவ்வகையில் எங்கள் குழுவில் நடனமாடும் திறனாளர்கள் இருவரின் நடனத்தைக் கண்டு வியக்கிறேன். அவர்களுடன் இணைந்து படைப்பதில் மிக்க மகிழ்ச்சி,” என்றும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்