தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கலைகளும் பாரதியார் கவிதைகளும்

4 mins read
‘கலைமகள் எழுதிய கவிதைப் புத்தகமா இவன்’ - வைரமுத்தின் ‘கவிராஜன் கதை’
c2c4a4d5-617b-40bb-a6cc-fa681de1ce16
பாரதியாரின் பாடல்களுடன் பெண்மையின் பன்முகங்களைப் பேசிய ‘ஈரம்’ நாட்டிய நாடகத்திலிருந்து ஒரு காட்சி. - படம்: கல்பவிருக்‌ஷா ஃபைன் ஆர்ட்ஸ் லிமிடெட்

கவிதைகள் ஒரு கருப்பொருளில் அமைந்த கருத்துகளின் வெளிப்பாடு என்பதைத் தாண்டி, உணர்ச்சிகளும் ராகம், தாளம், ஜதி, என இசைநயத்துடன் அமைந்தவை பாரதியாரின் கவிதைகள். கலைகளும் பாரதியாரின் கவிதைகளும் பிரிக்க முடியாதவை.

அதனாலேயே கண்களையும் செவிகளையும் கவர்ந்து இன்பம் ஊட்டும் கவின்கலைகளில் ஈடுபாடு கொண்டுள்ள பலரும் பாரதியின் கவிதைகளால் கவரப்பட்டவர்களாக இருப்பர்.

நடனக்கலைஞர் ‘மீரா’

அப்படி ஒரு கலைஞராக, மனிதராக தமது வாழ்வில் பாரதிக்கும் அவரது பாடல்களுக்கும் தனி இடம் உண்டு என்கிறார் நடனக்கலைஞர் மீரா பாலசுப்ரமணியன்.

‘கல்பவிருக்‌ஷா ஃபைன் ஆர்ட்ஸ் லிமிடெட்’ நிறுவனரான இவர், பெண்மையின் பல்வேறு அம்சங்களைப் பேசும் ‘ஈரம்’ எனும் நாட்டிய நாடகத்தைப் பாரதியாரின் பாடல்கள் அடிப்படையில் அமைத்ததைச் சுட்டினார்.

ஏறத்தாழ தமது அனைத்து நடன நிகழ்ச்சிகளிலும் பாரதியின் பாடல்கள் இருக்கும் என்ற அவர், “நான் மட்டுமன்று. எல்லா நடனக் கலைஞர்களுமே பாரதியின் பாடல்களுக்கு நடனமாட விரும்புவார்கள்,” என்றார்.

“பாரதியார் தமது காலம் தாண்டி சிந்தித்த மகாகவி,” எனப் புகழ்ந்த அவர், நேர்மறைச் சிந்தனைகளை வலியுறுத்தும் ‘கனவு மெய்ப்பட வேண்டும்’, பேதமின்மையைக் கொண்டாடும் ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என இன்றளவும் தொடர்புபடுத்தக்கூடிய, தேவையான கருத்துகளை அவர் கவிதைகள் பேசியுள்ளதையும் அவற்றை தமது நடனங்களில் பயன்படுத்தியதையும் குறிப்பிட்டார்.

“இயல்பான நயமான அசைவுகளுக்கு ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’, ஆற்றல் வாய்ந்த நடனமாட ‘தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்’ எனத் தேவைப்படும் அனைத்தும் அவர் கவிதைகளில் இருக்கும். அவை அள்ள அள்ளக் குறையாதவை,” என்றும் சொன்னார் மீரா.

‘அக்னிக் குஞ்சொன்று கண்டேன்’ பாடலுக்கு நடனமாடும்போது உடலிலும் மனத்திலும் பிறக்கும் ஆற்றல் விவரிக்க முடியாதது என்றும் சிலிர்ப்புடன் பகிர்ந்தார்.

நம்மால் சொல்ல முடியாத, தயங்கும் யாவற்றையும் உறுதிபடப் பாடியவர் பாரதி என்று கூறிய அவர், “பாரதியார் எப்போதும் எனது கருத்துகளுக்குக் குரலாக இருக்கிறார்,” என்றும் சொன்னார்.

இசைக்கலைஞர் நிரஞ்சன்

பாரதியின் ஒவ்வொரு பாடலிலும் அதற்குரிய ராகமும் தாளமும் எழுதப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பென்றும் அது அவரது இசைத் திறனைக் காட்டுகிறதென்றும் சொல்கிறார் இசைக்கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
பாரதியின் ஒவ்வொரு பாடலிலும் அதற்குரிய ராகமும் தாளமும் எழுதப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பென்றும் அது அவரது இசைத் திறனைக் காட்டுகிறதென்றும் சொல்கிறார் இசைக்கலைஞர் நிரஞ்சன் பாண்டியன். - படம்: நிரஞ்சன் பாண்டியன்

ஒன்பது வயதில் பள்ளிப் பருவப் பாடல்கள்மூலம் தமக்கு அறிமுகமான பாரதியாரின் பாடல்கள், தாம் வாழ்வின் கடினமான சூழ்நிலைகளைச் சந்தித்தபோது ஆதரவாக அமைந்ததாகக் கூறினார் இசைக்கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.

“வாழ்வில் சில அனுபவங்களை எதிர்கொண்டபோது நானும் பாரதியை உணர்ந்தேன்,” என்று ஆர்வத்துடன் பேசத் தொடங்கிய நிரஞ்சன், தமது இசைப் பயணத்தில் பாரதிக்குப் பெரும்பங்குண்டு என்றார்.

பாரதியாரின் வாழ்க்கையும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடுவதில் அவர் காட்டிய அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் தம்மை ஆழமாகப் பாதித்ததாக நிரஞ்சன் குறிப்பிட்டார்.

மேலும், வளர்ந்து வரும் கலைஞரான தமக்குப் பணியில் சிறப்பதுடன், சமூகத்திற்காகவும் பணியாற்ற வேண்டும் எனும் உத்வேகம் பிறக்கக் காரணம் பாரதியின் கவிதைகளே என்றும் இவர் சொன்னார்.

‘ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்! - பல்லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்டாமெனல் கேளீரோ?’ - இவை எப்போதும் தமது மனத்தில் ஓடிக்கொண்டிருக்கும் வரிகள் என்று சொன்ன அவர், “இது அறிவுத் தேடலையும் மனித அனுபவத்தின் சாரத்தைப் புரிந்துகொள்வதையும் இந்த உலகை நோக்கிய என் கண்ணோட்டத்தையுமே இரு வரிகளுக்குள் அடக்கியுள்ளது. இது விவரிக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது,” எனச் சிலிர்ப்புடன் பகிர்ந்தார் நிரஞ்சன்.

“இசையையும் பாரதியையும் பிரிக்க முடியாது,” என்று சொன்ன நிரஞ்சன், தாம் பணியாற்றிய பாரதியார் பாடல் இசைக்கோப்புகள் குறித்தும் பகிர்ந்தார்.

‘என் நினைவில் பாரதி’ எனும் திட்டத்தின் பகுதியாக, ‘சின்னஞ்சிறு கிளியே’, ‘சுட்டும்விழிச் சுடர்தான் கண்ணம்மா’, ‘காலைத் துயிலெழுந்து’ எனும் குயில் பாட்டு ஆகியவற்றுக்கு நவீன வடிவம் அளித்ததைப் பெருமையுடன் இவர் நினைவுகூர்ந்தார்.

“பாரதியாரின் பங்களிப்புகளைப் பற்றிப் பேசும்போது, ​​தமிழ் மரபுமீது தனிப்பெருமை ஏற்படுகிறது. வேகமான உலகில் சிரமங்களைக் கடக்கத் துடிக்கும் வேளையில், நிகழ்காலம் குறித்த சிந்தனையைத் தூண்டி வாழ்வின் மீதான ஆர்வத்தை அவரது கவிதைகள் தூண்டுகின்றன, கற்றுக்கொடுக்கின்றன,” என்கிறார் நிரஞ்சன்.

மேலும், “ஓர் இசைக்கலைஞராக அவரது கவிதைகளைப் பலர் முன் வெவ்வேறு வடிவில் படைக்க முடிந்தது எனக்குக் கிடைத்த பெரும்பேறு,” என்றும் இவர் சொன்னார்.

கவிஞரின் பார்வையில் மகாகவி:

தமது வசனநடைக் கவிதைகளுக்கு வித்தாக அமைந்தவை பாரதியின் கவிதைகள்தான் என்கிறார் இராஜே‌ஷ்.
தமது வசனநடைக் கவிதைகளுக்கு வித்தாக அமைந்தவை பாரதியின் கவிதைகள்தான் என்கிறார் இராஜே‌ஷ். - படம்: இராஜே‌ஷ் குமார் தர்மலிங்கம்

ஒவ்வொரு நவீன கவிஞரின் நடையிலும் சிந்தனையிலும் நிச்சயமாக பாரதியின் தாக்கம் இருந்தே தீரும் என்கிறார் கவிஞரும் ‘கவிப்பெருக்கு’ அமைப்பின் நிறுவனருமான இராஜேஷ் குமார் தர்மலிங்கம். சமூகக் கருத்துகள் பேசும் கவிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்பவர் பாரதி என்றும் சொன்னார் அவர்.

அவரது துணிவையும் கேள்வி கேட்கும் உறுதியையும் கண்டு வியந்ததாகக் கூறிய அவர், “அவரது சொல் ஆளுமை அளப்பரியது. அவர் கவிதைகளிலிருந்து நான் கற்ற சொற்கள் ஏராளம்,” என்றார்.

பாரதிக்கு முந்தைய, அவரது சமகால எழுத்துகள், இலக்கியங்கள், கவிதைகள் அனைத்தும் மொழியறிவு படைத்தவருக்காக எழுதப்பட்ட நிலையில், குழந்தைகள் தொடங்கி யாவர்க்குமான கவிதைகளை எழுதிய முதல் கவி அவர் என்றும் இராஜே‌ஷ் கூறினார்.

அடித்தட்டு மக்களின் சூழல், வாழ்வியல், அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், போர்ச்சூழல் என அவர் எழுதியவை தலைமுறை இடைவெளி, பொறுமையற்ற தன்மை ஆகியவற்றைத் தாண்டி, அன்றும் இன்றும் இன்னும் நூற்றாண்டுகள் கடந்தும் போற்றப்படக்கூடியவை என்கிறார் இராஜே‌ஷ்.

“நான் புரட்சியாளன் அல்லன். ஆனால், மனசாட்சிக்கு விரோதமற்ற மனிதனாக வாழ உந்துதல் தருவது பாரதி கவிதைகளே,” என்ற அவர், ‘நின்னைச் சில வரங்கள் கேட்பேன்’ எனும் கவிதையில் வரும் ‘மதிதன்னை மிகத் தெளிவு செய்து என்றும் சந்தோ‌‌ஷம் கொண்டிருக்கச் செய்வாய்’ என்பதே தம் மனத்தில் எப்போதும் ஒலிக்கும் கவிதை என்றும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்