நடைபாதையில் கலைப்படைப்பு: இளையர்மீது எஸ்எம்ஆர்டி புகார்

நடைபாதையில் கலைப்படைப்பு: இளையர்மீது எஸ்எம்ஆர்டி புகார்

2 mins read
6d169e29-3c90-4de5-8fb6-fc4382f20763
மவுண்ட்பேட்டன் ரயில் நிலையம் அருகே, நடைபாதை தளத்தை சுத்தம் செய்து கலைப்படைப்பு ஒன்றை உருவாக்க முயன்றதாக மார்கஸ் பாங் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. - படம்: டிக்டாக்/கேஸிங்

மவுண்ட்பேட்டன் ரயில் நிலையம் அருகே, நடைபாதை தளத்தை சுத்தம் செய்து கலைப்படைப்பு ஒன்றை உருவாக்க முயன்ற மார்கஸ் பாங், 24 மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சாக்பீஸ் ,உயர் அழுத்த நீர் தெளிப்பான் (பவர் வாஷர்) சாதனம் கொண்டு நடைபாதைகளில் ஓவியங்களை வரைவதை மார்கஸ் பாங் வழக்கமாகக் கொண்டுள்ளார். அவ்வகையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 5 ) அவர் வெளியிட்ட டிக்டாக் காணொளியில் இச்சம்பவம் குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.

ரயில் நிலையத்தில் ஏறத்தாழ 5 மணி நேரமாக இந்த ஓவியப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது, புல்வெளியில் ரசாயனங்களை தெளிப்பதாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் அங்கு வந்து அவரைத் தடுத்து நிறுத்தியதாகவும் அந்தப் பதிவு குறிப்பிட்டது.

“நான் கலைப்படைப்பிற்காக எந்த ரசாயனத்தையும் பயன்படுத்தவில்லை, மழைநீரைக் கொண்டுதான் கான்கிரீட் தரையை சுத்தம் செய்து ஓவியமாக மாற்றினேன். புல்லின் மீது தெளிக்கப்பட்டது இயந்திரத்தின் எரிபொருள் (Gasoline) வாசனை மட்டுமே” என்று மார்கஸ்  விளக்கமளித்துள்ளார்.

இருப்பினும், உரிய அனுமதி இன்றி பொது இடத்தில் ஓவியம் வரைவதாகக் கூறி எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் அவரை தடுத்து வைத்ததாகவும், பின்னர் இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

மேலும் விசாரணைக்குப் பிறகு காவல்துறை அதிகாரிகள் பாதி முடிக்கப்பட்ட ஓவியத்தைப் பார்த்து வியந்ததாகவும், இதில் எந்தத் தவறும் இல்லை என்பதால் தொடர்ந்து பணியை மேற்கொள்ள அனுமதித்ததாகவும் மார்கஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க, அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஒப்புதல் கடிதம் பெறுமாறு அல்லது சாலையோரக் கலை நிகழ்ச்சிகளுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அடுத்த நாள் தனது ஓவியத்தை முழுமையாக முடிப்பதற்காக மார்கஸ் அந்த இடத்திற்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு அவரது கலைப்படைப்பு முழுமையாக அழிக்கப்பட்டிருந்தது.

“பெரும்பாலான மக்கள் ரசிக்கும் கலைப்படைப்பை, ஏன் அழிக்க வேண்டும்? ஊழியர்கள் அதை அழிப்பதற்கு முன்பு என்னை தொடர்பு கொண்டிருக்கலாம்,’’ என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் மார்க்ஸ்.

குறிப்புச் சொற்கள்
புகார்விசாரணைசிங்கப்பூர்காவல்துறை