சிங்கப்பூரின் எம்ஆர்டி நிலையங்கள் வெறும் ரயில் நிலையங்களோடு நின்றுவிடாமல் வரலாறுகளை நினைவுகூரும் காட்சி நிலையங்களாகவும் உருவாக்கப்படுகின்றன.
எம்ஆர்டி நிலையங்களை உலகின் மிக அழகான ரயில் நிலையங்களாக மாற்றுவதற்கு கலையை சிங்கப்பூர் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை இங்கு காணலாம்.
நீங்கள் எப்போதாவது நியூட்டன் எம்ஆர்டி நிலையம் சென்றிருந்தால் டௌன்டவுன் வழித்தடத் தள ரயிலிலிருந்து இறங்கி கடக்கும்போது மின்படிக்கட்டுகளின் அருகே 11.4 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான கறுப்பு-வெள்ளை சுவரோவியத்தைக் கவனித்திருக்கலாம்.
ஏனெனில், ரயில் நிலையங்கள் என்பவை நாம் தங்கிச் செல்லும் இடங்கள் அல்ல; மாறாக மக்கள் அவசர அவசரமாகக் கடந்து செல்லும் ஓர் இடைக்காலப் பகுதி மட்டுமே என்பதால் அந்தச் சுவரோவியம் உங்கள் கண்களில் படாமலும் இருந்திருக்கலாம்.
இருப்பினும், உள்ளூர் கலைஞர் டான் ஜி ஸி உருவாக்கிய ‘நியூட்டன்’ என்ற சுவரோவியம் போன்ற கலைப் படைப்புகள், சிங்கப்பூரின் எம்ஆர்டி வலைப்பின்னலின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டன.
‘ஆர்ட் இன் டிரான்சிட்’ (AIT) என்ற திட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் இந்த கலைப் படைப்புகளை, ‘சிங்கப்பூரின் மிகப்பெரிய பொதுக் கலைக் கண்காட்சி’ என்று நிலப் போக்குவரத்து ஆணையம் வர்ணிக்கிறது.
அந்தத் திட்டம் கடந்த 1997ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு எம்ஆர்டி வழித்தடம் உருவானபோது அறிமுகம் கண்டது.
அப்போது முதல் திறக்கப்படும் புதிய ரயில் நிலையங்கள் அந்தந்த வட்டாரத்தின் வரலாறு மற்றும் பின்னணியைப் பிரதிபலிக்கும் தனித்துவமான கலைப் படைப்புகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.
எம்ஆர்டி நிலையங்களுக்கு அழகூட்டும் கலைப் படைப்புத் திட்டம், இவ்வாண்டு வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு வழித்தடங்களில் உள்ள பழைய ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்கள் என்பது மக்கள் கடந்துசெல்லும் இடங்கள் மட்டுமே என்றால், இவ்வளவு கவனமாக இந்த கலைப் படைப்புகளை அமைப்பதன் நோக்கம் என்ன?
அன்றாடப் பயணத்தில் அர்த்தமுள்ள, மறக்கமுடியாத தருணங்களை உருவாக்குவதே கலைப் படைப்புகளை அமைப்பதன் நோக்கம் என்று பதிலளிக்கிறது நிலப் போக்குவரத்து ஆணையம்.
“எம்ஆர்டி நிலையங்களை அழகாக மாற்றுவதுடன் மட்டுமல்லாமல், அவை சிங்கப்பூரின் ஒட்டுமொத்த நகர அடையாளத்திற்கும் பங்களிக்கின்றன,” என்கிறார் உள்ளடக்க உருவாக்குநரும் பாரம்பரியக் கல்விப் பயிற்றுநருமான ஹோ யோங் மின்.
“இந்தக் கலைப் படைப்புகள் எம்ஆர்டி நிலையங்களுக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தைத் தருகின்றன.
“அதனால் அவை வெறும் சாதாரணப் போக்குவரத்து நிலைய அலங்காரம் என்பதோடு நின்றுவிடாமல், எளிதில் அடையாளம் காணக்கூடிய இடங்களாக மாறிவிடுகின்றன,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் ரயில் நிலையங்கள் தலைமுறைகளைக் கடந்து நிலைத்து நிற்கும் வகையில் கட்டப்பட்டவை.
எனவே, அவற்றில் கலைப் படைப்புகளை அமைப்பதன் மூலம், நகரத்தின் கட்டமைப்புடன் கதைகளையும் நினைவுகளையும் கருத்துகளையும் நாம் ஆழமாகப் பதிக்கிறோம் என்கிறார் திரு ஹோ.
“ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த வேலைப்பாடுகள் அந்தந்த காலத்தின் பதிவுகளாகவும் மாறுகின்றன. இவை உருவாக்கப்ப்பட்ட காலத்தில் சிங்கப்பூர் சமூகமாக எங்கு இருந்தது, நாம் என்ன கதைகளைச் சொல்ல விரும்பினோம், கலைக்கும் பொது இடங்களுக்கும் இடையிலான தொடர்பை நாம் எவ்வாறு பார்த்தோம் என்பதை எல்லாம் இந்த கலைப் படைப்புகள் பிரதிபலிக்கின்றன.
“எதிர்காலத் தலைமுறையினர் இந்த உள்கட்டமைப்புடன் சேர்த்து பாரம்பரியமாகப் பெறப்போகும் விஷயம் இது,” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அமைப்பியல் அழகைத் தாண்டி, பயணிகள் நிலையங்களை எளிதாக அடையாளம் கண்டு வழிநடத்தவும் இந்த கலைப் படைப்புகள் நடைமுறை ரீதியாகப் பயன்படுகின்றன.
இந்தக் கலைப்படைப்புகள் அவற்றின் காட்சி அழகைத் தாண்டி, நிலையங்களில் வழி கண்டுபிடிப்பதை எளிதாக்குவதில் சிறப்பாகப் பங்காற்றுகின்றன. உதாரணமாக, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் வழித்தடத்தில் உள்ள மேக்ஸ்வெல் நிலையத்தில் இருக்கும் ஜஸ்டின் லீயின் ‘ஓல்ட் சைனாடவுன் இன் நியூ மேக்ஸ்வெல் லைஃப்’ என்ற கலைப்படைப்பைச் சொல்லலாம்.
இது ஓரிடத்தில் மட்டும் அல்லாமல் நிலையம் முழுவதும் பரவலாக அமைந்துள்ளது. அந்த எம்ஆர்டி நிலையத்தின் ஒரு நுழைவாயிலில், சாலையோரக் கடைகளின் மின்விளக்குகளும் சாப்பிடும் ஒரு குழந்தையும் மேக்ஸ்வெல் உணவு மையத்தை நோக்கிய வழியைக் காட்டுகின்றன.
மற்றொரு நுழைவாயிலில், புத்தர் கோயில் மற்றும் அருங்காட்சியக வழிகளை மேகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
நிலப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தியாளர் ஒருவர் கூறுகையில், “நடைமேடையில், நிலையத்தின் பெயரை ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் இந்தக் கலைப்படைப்பு கொண்டுள்ளது. இது ஓர் அடையாள உணர்வை வலுப்படுத்துவதோடு, பயணிகளுக்கு வழி கண்டுபிடிப்பதற்கும் உதவுகிறது,” என்றார்
எண்ணம் வேறு; வண்ணம் வேறு
2003ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு வழித்தட நிலையங்களுடன் திறக்கப்பட்ட ஹவ்காங் எம்ஆர்டி நிலையத்தில் சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கத்தினாலான கலைப்படைப்பு உருவாக்கப்பட்டது.
‘ஹவ்காங்கிற்காகக் கைகளை உயர்த்துங்கள்’ என்னும் கருப்பொருளில் அமைந்த அந்தப் படைப்பு, மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்டது என்கிறார் ஓவியக் கலைஞர் செக் யோக் யிங்.
ரயில் நிலையத்தின் சுவர்களில் பதிக்கப்பட்ட 3,000 மக்களின் இரு கை அச்சுகளை அது காட்சிப்படுத்துகிறது. ஆனால், ஒருவருக்கு ஒரு கை அச்சு என்னும் விகிதத்தில் 7,000 பேரை அதில் பங்கேற்க வைக்கலாம் என்று தாம் மதிப்பிட்டிருந்ததாகத் தெரிவித்தார் 50 வயதான திருமதி செக்.
அவரது விருப்பப்படி நிகழ்ந்திருந்தால் அந்தக் கலைப்படைப்புக்காக ஒன்று சேர்ந்தோரின் எண்ணிக்கை இருமடங்காகி இருக்கும்.
ஆனால், திட்டத்தை செயல்பாட்டு ரீதியாக மேலும் எளிதாக்க, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 3,000ஆகக் குறைக்கப்பட்டது.
ஹவ்காங்கில் வசிக்கும் மக்களின் கை அச்சு அந்த எம்ஆர்டி நிலையத்தில் இருக்க வேண்டும் என்பதும் அவரது விருப்பமாக இருந்தது.
ஆனால், வடக்கு கிழக்கு ரயில் வழித்தடத்தில் வசிக்கும் மக்களும் அதில் இணைக்கப்பட்டனர்.
(இந்தத் தொகுப்பு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்)


