கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், 1எம்டிபி (1MDB) ஊழல் விவகாரத்துடன் தொடர்புடைய இன்னும் அதிகமான விலையுயர்ந்த கலைப் படைப்புகளை மீட்கப்போவதாகப் புதன்கிழமை (மே 6) சூளுரைத்துள்ளது.
அண்மையில் மீட்கப்பட்ட நான்கு கலைப் படைப்புகளை ஆணையம் அதன் தலைமையகத்தில் காட்சிக்கு வைத்தது. அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட $198,000 அமெரிக்க டாலர்.
கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டுவரை 1எம்டிபி அரசாங்க நிதியிலிருந்து களவாடப்பட்ட $4.5 பில்லியன் அமெரிக்க டாலரை மீட்க ஊழல் தடுப்பு ஆணையம் முயற்சி செய்துவருகிறது.
அதன் ஒரு பகுதியாகக் கடந்த மாதம் நான்கு விலையுயர்ந்த கலைப் படைப்புகளை வெற்றிகரமாக ஆணையம் மலேசியாவிற்குத் திரும்பக்கொண்டுவந்தது. அவற்றுள், 1961ஆம் ஆண்டு வரையப்பட்ட பாப்லோ பிக்காசோவின் ஓவியமும் அடங்கும்.
உயர்மட்ட அதிகாரிகளும் அவர்களின் கூட்டாளிகளும் 1எம்டிபி அரசாங்க நிதியைக் களவாடியதாகக் கூறப்படுகிறது. அவர்கள், சொகுசு ஹோட்டல்களில் தங்குவதற்கும் விலையுயர்ந்த கலைப் படைப்புகளை வாங்குவதற்கும் அந்த நிதியைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் ஊழல் தொடர்பில் மீட்கப்பட்ட நான்குக் கலைப் படைப்புகளும் ஆணையத்தின் தலைமையகத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளன என்றார் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அசாம் பாக்கி.
அந்தக் கலைப் படைப்புகள் சரியான முறையில் பாதுகாக்கப்படுவதை மலேசியாவின் தேசிய கலைக்கூடம் உறுதிசெய்வதாக அவர் குறிப்பிட்டார்.
“இவை விலையுயர்ந்த கலைப் படைப்புகள் மட்டுமல்ல. இவை, நாட்டில் நிகழ்ந்த ஆகப் பெரிய ஊழலின் அடையாளமாகவும் இருக்கின்றன,” என்றார் திரு அசாம்.
தொடர்புடைய செய்திகள்
மலேசியாவின் தேசியக் கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்படும் அந்தக் கலைப் படைப்புகள் பின்னர் ஏலத்தில் விடப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலேசியாவின் நிதியமைச்சு அதுகுறித்து இறுதி முடிவை அறிவிக்கும்.
1எம்டிபி தொடர்பில் மொத்தம் 12 விலையுயர்ந்த கலைப் படைப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 8 கலைப் படைப்புகள் இன்னும் மீட்கப்படவில்லை.

