உலகப் பூசல்கள்வழி கலைப் படைப்புகள் சலனத்தை மூட்டக்கூடாது

உலகப் பூசல்கள்வழி கலைப் படைப்புகள் சலனத்தை மூட்டக்கூடாது

2 mins read
30a97e26-f98a-4243-882f-a177267e7caf
ஜூலை 29ல் சிங்கப்பூரில் நடைபெற்ற தங்களது நிகழ்ச்சியின் முடிவில், ‘மேசிவ் அட்டாக்’ இசைக் குழுவைச் சேர்ந்த ராபர்ட் டெல் நஜா மற்றும் கிராண்ட் மார்ஷல் ஆகியோர் மேடையில் பாலஸ்தீனக் கொடியுடன் நிற்கின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

அனைத்துலக மோதல்களால் ஏற்படும் மனிதாபிமான பாதிப்புகளை  அங்கீகரிக்கும் வகையில் சிங்கப்பூர் அரசாங்கம், பாதிக்கப்பட்டவர்களுக்காகக் கலைஞர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்துவதற்குத் தடை விதிக்கவில்லை என்று தகவல், மின்னிலக்க மேம்பாடு மூத்த துணை அமைச்சர் டான் கியாட் ஹவ் தெரிவித்தார்.

இருப்பினும், அத்தகைய கலைஞர்களின் படைப்புகள் சிங்கப்பூரின் பொது ஒழுங்கு, தேசியப் பாதுகாப்பு அல்லது நிலைத்தன்மைக்குப் பாதகம் விளைவிக்காத வகையில் அமைந்திருக்க வேண்டும் என்று அவர் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.

இஸ்ரேல்-காஸா பூசல், இனப்படுகொலை போன்றவற்றைக் கருப்பொருள்களாக ஆராயும் நிகழ்ச்சிகள் உட்பட, இதுபோன்ற விவகாரங்களை முன்னிறுத்தும் கலைநிகழ்ச்சிகள் பலவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அனைத்துலக மோதல்கள் தொடர்பில் கலைஞர்களின் நடத்தையை அரசாங்கம் எவ்வாறு மதிப்பிடுகிறது என்று ஈஸ்ட்- கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்லினா அப்துல் ஹலிம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது திரு டான் இவ்வாறு கூறினார்.

‘பிரிட்டிஷ் ட்ரிப்-ஹாப்’ இசைக் குழுவான மேசிவ் அட்டாக்கைச் (Massive Attack) சேர்ந்த இருவருக்குக் காவல் துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டதையடுத்து அவரது இந்தக் கேள்வி எழுந்துள்ளது. 

கடந்த ஜூலை 29ஆம் தேதி  அவர்கள்  இங்கு நடைபெற்ற தங்களின் இசை நிகழ்ச்சியில் பாலஸ்தீனக் கொடியைக் காட்டியதுடன், அவர்களில் ஒருவர் பாலஸ்தீனச் சுதந்திரத்திற்காக முழக்கமிட்டார்.

இந்த நுழைவுத் தடையின் காரணமாக, அந்த இசைக் குழுவின் எதிர்கால நிகழ்ச்சிகளுக்கான எந்தவொரு விண்ணப்பத்திற்கும் தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் அனுமதி வழங்காது.

இது குறித்து விளக்கிய திரு டான், இங்கு நிகழ்ச்சி நடத்தும் உள்ளூர், வெளிநாட்டுக் கலைஞர்கள் தங்களின் நிகழ்ச்சிகளின்போது சிங்கப்பூரின் சட்டங்களுக்கும் அவர்களது உரிமத்தின் நிபந்தனைகளுக்கும் இணங்கி நடப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

கலை சார்ந்த வெளிப்பாடுகள் இங்குள்ள பொது ஒழுங்கிற்குப் பாதகம் விளைவிக்கக் கூடாது என்ற நிபந்தனை தகவல், ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் கலை, கேளிக்கை வகைப்பாட்டு நெறிமுறையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதுடன், உரிமம் பெற்ற அனைவரும் இதனைப் பின்பற்ற வேண்டும்.

நாடகங்கள், மேடைச் சிரிப்புரைகள், கலைக் கண்காட்சிகள், இலக்கிய வாசிப்புகள், நடன நிகழ்ச்சிகள், பல்சுவை நிகழ்ச்சிகள்,  இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை வெவ்வேறு வயதுப் பிரிவினருக்கு அவற்றின் பொருத்தத்தின் அடிப்படையில் இந்த நெறிமுறை வகைப்படுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்