அனைத்துலக வர்த்தகப் பாதைகள் தடையின்றி தொடர ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் உறுதி

அனைத்துலக வர்த்தகப் பாதைகள் தடையின்றி தொடர ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் உறுதி

2 mins read
91795e0a-cf3c-44db-8a7b-e6f4319c147c
சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை (மே 30) ஆசியான் தற்காப்பு அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. (நடுவில்) சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங். - படம்: தற்காப்பு அமைச்சு

உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியில், அனைத்துலக கடல், வான் வழித்தடங்களில் வர்த்தகப் போக்குவரத்தை  எந்தவிதத் தடையுமின்றித் தொடர்வதற்கான தங்களது நிலைப்பாட்டை ஆசியான் நாடுகளின் தற்காப்பு அமைச்சர்கள் மறுவுறுதி செய்துள்ளனர்.

சிங்கப்பூரில் நடைபெறும் ஷங்ரிலா கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை (மே 30) நடைபெற்ற ஆசியான் தற்காப்பு அமைச்சர்களின் கூட்டத்தில்  இந்த ஒருமித்த முடிவு எட்டப்பட்டது.

அனைத்துலக சட்டங்களுக்கு மதிப்பளித்தல்

இக்கூட்டத்தில், அனைத்துலக கடல்சார் சட்டங்கள், குறிப்பாக 1982ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் கடல்சார் சட்ட உடன்படிக்கையின்படி, கப்பல்கள், விமானங்கள் சுதந்திரமாகச் சென்று வருவதற்கான உரிமையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர். 

உலக அளவில் ஏற்பட்டுள்ள விநியோகச் சங்கிலித் தடைகளைக் கருத்தில்கொண்டு, இவ்வட்டாரத்தின் பொருளியல் நெருக்கடிகளைத் தவிர்க்க இந்த வழித்தடங்கள் தடையின்றி இயங்குவது முக்கியம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

கூட்டுப் பாதுகாப்பு உத்தி

வட்டாரத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் பேண, ஆசியான் உறுப்பு நாடுகள் தங்களுக்குள் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும், எந்தவொரு கருத்து வேறுபாடுகளையும் வன்முறையின்றி, பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் இக்கூட்டத்தில் வலியுறுத்தினர்.

தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங், பிலிப்பீன்சின் தேசிய தற்காப்பு அமைச்சர்  கில்பர்டோ தியோடோரோ ஜூனியர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த காலை உணவுடன் நிகழ்ந்த கூட்டத்தில், தென்கிழக்கு ஆசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எட்டு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

அந்த சந்திப்பின்போது இவ்வட்டாரத்தில் அனைத்துலக சட்டங்கள் நெறிமுறைகளின் முக்கியத்துவத்தை தலைவர்கள் வலியுறுத்தினர். 

கடந்த பிப்ரவரி 28ல் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக இஸ்லாமியக் குடியரசான ஈரான், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கை கையாளும் மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது.

இந்தச் சூழலில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தோனீசியாவின் நிதியமைச்சர், மலாக்கா மற்றும் சிங்கப்பூர் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு வரி விதிக்கும் யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார்.

மேலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயை மூன்று வழிகளில் பிரித்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இது, மலாக்கா நீரிணைக்கான போக்குவரத்தை எந்தவொரு நாடும் தன்னிச்சையாகத் தீர்மானிக்க முடியாது என்பதை இந்தோனீசிய - மலேசிய வெளியுறவு அமைச்சர்கள் மீண்டும் திட்டவட்டமாக வலியுறுத்துவதற்குத் தூண்டுகோலாக அமைந்தது. 

இதற்கிடையே, மேற்கூறிய சந்திப்பு குறித்த அறிக்கையில், ஆண்டுதோறும் நடைபெறும் தற்காப்பு உச்சிமாநாடான ‘ஷங்ரிலா கலந்துரையாடல்’, உலகெங்கிலும் உள்ள தற்காப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆசியான்  உறுப்பினர்கள் கலந்துரையாடுவதற்கான ஒரு சிறந்த தளத்தை எவ்வாறு வழங்குகிறது என்பதை தற்காப்பு அமைச்சர்கள் உறுதிப்படுத்தியதாக சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஆசியான்தற்காப்புவர்த்தகம்