ஆசியான் அளவிலான மின்சார விநியோகக் கட்டமைப்பு மூலம் வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு இன்னும் மலிவான, தூய்மையான மின்சாரம் கிடைக்கலாம். ஆனால் நாடுகளுக்கு இடையில் உள்ள மோசமான மின்சாரத் தொடர்புகள், பசுமை மின்சாரத்துக்கான குறைவான தேவை போன்றவை வட்டாரங்களில் முதலீடு செய்வதற்கு இடையூறாக இருக்கும் சில காரணங்கள்.
ஆண்டுக்குக் கிட்டத்தட்ட $272க்கும் அதிகமான பசுமை முதலீட்டுக்குத் தேவையான குறைப்பாட்டைத் தென்கிழக்காசியா எதிர்கொள்வதாக எரிசக்திச் சந்தை ஆணையத் துணைத் தலைமை நிர்வாகி லோ ஸின் வெய் வியாழக்கிழமை (மே 8) கூறினார்.
பருவநிலை குழுவின் ஆசிய நடவடிக்கை மாநாட்டில் பேசிய அவர், மூலத்தனத்துக்கான செலவு ஒவ்வொரு முறையும் 2 விழுக்காடு உயரும்போது சூரியசக்தி, காற்றாலை போன்றவற்றின் மூலம் வரும் மின்சார உற்பத்திக்கான செலவு 20 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயரும் என்றார்.
இது, வட்டாரம் கையாள வேண்டிய முக்கிய நிதிச் சவால் என்றார் அவர்.
ஆசியான் நாடுகளில் பசுமை எரிசக்தி வர்த்தகத்துக்கான இலக்கை எட்ட அரசாங்கங்கள், காப்பீட்டாளர்கள், இதர புத்தாக நிதி நடைமுறைகள் ஆகியவை முதலில் அபாயங்களைக் குறைக்க முயல வேண்டும். அப்போதுதான் முதலீட்டாளர்கள் துணிந்து அடியெடுத்து வைக்க முன்வருவார்கள் என்று திரு லோ குறிப்பிட்டார்.
இன்று, படிம எரிபொருளான இயற்கை எரிவாயு, சிங்கப்பூரின் மின்சாரக் உற்பத்தியில் 95 விழுக்காடு பங்கு வகிக்கிறது. கரிம வெளியேற்றத்தைக் கிட்டத்தட்ட 60 மில்லியன் டன்னுக்கு குறைப்பது உள்ளிட்ட 2030ஆம் ஆண்டுக்கான பருவநிலை இலக்கை எட்ட பசுமை எரிசக்தி இறக்குமதிகள்மீது கவனம் செலுத்தப்படுகிறது.
எனவேதான் சிங்கப்பூர் அரசாங்கம் பல ஆண்டுகளாக ஆசியான் விநியோகக் கட்டமைப்பை உருவாக்குவதில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சூரியசக்தி, தண்ணீர், காற்றாலை போன்றவற்றின் மூலம் 5.6 கிகாவாட்ஸ் பசுமை மின்சாரத்தை இறக்குமதி செய்ய அண்மையில் கம்போடியா, வியட்னாம், இந்தோனீசியா ஆகிய நாடுகளுடன் சிங்கப்பூர் ஒப்பந்தம் செய்துகொண்டது.
2035ஆம் ஆண்டுக்குள் நாட்டின் எரிசக்தி தேவைகளின் மூன்றில் ஒரு பங்கு, மின்சார இறக்குமதி மூலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டார அளவிலான விநியோகக் கட்டமைப்புக்கான அடித்தளத்தைப் போட, லாவோஸ்-தாய்லந்து-மலேசியா-சிங்கப்பூர் எரிசக்தி ஒருங்கிணைப்புத் திட்டம் வழி சிங்கப்பூர் 200 மெகாவாட்ஸ் மின்சாரத்தை இறக்குமதி செய்கிறது.