சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற உலகளாவிய ‘மோசடித் தடுப்பு உச்சநிலை மாநாடு ஆசியா 2025’ல், ஆசியான் அறக்கட்டளை புதிய மோசடித் தடுப்பு முன்முயற்சியை அறிவித்தது.
தென்கிழக்காசியாவின் மின்னிலக்கப் பொருளியல் தொடர்ந்து வேகமாக விரிவடைந்து வருவதால் அதிநவீன மோசடிகளின் அதிகரிப்பை சிங்கப்பூர் எதிர்கொண்டு வருகிறது.
தண்டனை ஆலோசனைக் குழுவின்படி, 2023ல் சிங்கப்பூரில் மோசடி தொடர்பான இழப்புகள் குறைந்தது $651.8 மில்லியனை எட்டின. மேலும், 46,563 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது, முந்தைய ஆண்டைவிட 46.8 விழுக்காடு அதிகமாகும்.
இந்தக் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக அறிவிக்கப்பட்ட மோசடி எதிர்ப்பு முன்முயற்சிக்கு $5 மில்லியன் நிதியுதவி ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
ஆசியான் அறக்கட்டளை உள்ளூர் அமலாக்கப் பங்காளிகளின் கூட்டுறவுடன் சிங்கப்பூர், திமோர்-லெஸ்டே உட்பட 10 ஆசியான் உறுப்பு நாடுகளிலும் மோசடிகளுக்கு எதிரான சமூகத்தின் முயற்சிகளை வலுப்படுத்த முற்படும்.
நிலைமை இன்னும் கவலைக்குரியதாக இருந்தாலும் மோசடிகளைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மோசடி எதிர்ப்புக் கட்டளை உருவாக்கம், ஸ்கேம்ஷீல்ட் செயலியின் வெளியீடு, நிதி, தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒரு பகிரப்பட்ட பொறுப்புக் கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல் ஆகியவை அதில் அடங்கும்.
மேலும், மோசடிச் சம்பவங்களில் ஏற்படும் நிதி இழப்புகளைத் தடுக்க, வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு அனுமதிக்கும் சட்டங்களையும் சிங்கப்பூர் அரசாங்கம் இயற்றியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“மோசடிகள் பணத்தை மட்டும் பறிப்பதில்லை. நம்பிக்கை, மரியாதை, வாய்ப்புகளையும் அவை பறிக்கின்றன. இந்த முயற்சிமூலம் ஆசியான், திமோர்-லெஸ்டே முழுவதும் உள்ள சமூகங்களுக்கு மோசடி செய்பவர்களை முறியடிப்பதற்கான அறிவு, கருவிகள், நம்பிக்கையை வழங்க நாங்கள் இலக்கு கொண்டுள்ளோம்.
“இது, தடுப்பது பற்றியது மட்டுமன்று. இது, மின்னிலக்க யுகத்தில் நமது சமூகங்களின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாப்பதைப் பற்றியது,” என்று ஆசியான் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் பிட்டி ஸ்ரீசங்னம் சொன்னார்.
இந்த முன்முயற்சியானது விழிப்புணர்வு, கல்வி, அதிகாரம் அளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி அவசரத் தேவையை நேரடியாகக் கையாளும்.
இந்தத் திட்டம், மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மோசடித் தடுப்பு வளங்களை விரிவுபடுத்தும்.
அதில் ‘மோசடிக்குத் தயாராக இருங்கள்’ என்ற கல்விசார் விளையாட்டு அடங்கியுள்ளது. அது, மோசடிகளை அடையாளம் காணும் திறன்களை வளர்க்க கூகல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாக 2,000க்கும் மேற்பட்ட முதன்மைப் பயிற்சியாளர்களைக் கொண்ட ஒரு வலுவான வலையமைப்பின் மூலம் 550,000 பேருக்கு விரிவான பயிற்சி அளிக்கப்படும்.
இளையர்கள், பெற்றோர், கல்வியாளர்கள், மூத்தோர் ஆகியோரை இணைய மோசடிகளுக்கு எதிரான முதல் பாதுகாப்பு அரணாக மாற்றுவது இதன் நோக்கம்.