ஆசியான் நாடுகளின் எரிசக்தித் துறை அமைச்சர்களும் பிரதிநிதிகளும் இவ்வட்டாரத்தில் எரிசக்திப் பாதுகாப்பைக் கட்டிக்காக்க ஒருங்கிணைந்த உடனடி நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் நிலவும் வேளையில் அவர்களது வலியுறுத்தல் வெளிவந்துள்ளது.
ஆசியான் எரிசக்தித் துறை அமைச்சர்களுக்கான சிறப்புக் கூட்டம் மெய்நிகர் முறையில் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) நடைபெற்றது. அக்கூட்டத்தில், ஒத்துழைப்பை வலுப்படுத்தி, காலத்துக்கு உகந்த கொள்கைகளைப் பின்பற்றி வட்டார எரிசக்திப் பாதுகாப்பைக் கட்டிக்காக்க இணக்கம் காணப்பட்டது.
ஈரான் போர்ப் பதற்றத்துக்கிடையே ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதை அடுத்து, நாடுகள் எரிசக்தி விநியோகத்தில் பங்கீட்டு முறையைக் கடைப்பிடிப்பதுடன் பலதரப்பிலிருந்தும் எரிசக்தியைத் தருவிப்பதில் கவனம் செலுத்துகின்றன. இந்தச் சூழலில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியின் தாக்கம் பெரும்பாலான தென்கிழக்காசிய நாடுகளைப் பாதித்துள்ளது.
இந்நிலையில், எரிபொருள் போக்குவரத்துக்கான முக்கியப் பாதைகளில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆசியான் எரிசக்தி அமைச்சர்கள் தங்கள் கூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.
பெட்ரோலியப் பாதுகாப்பு தொடர்பான ஆசியான் கட்டமைப்பு உடன்பாட்டைச் செயல்படுத்துவது உள்ளிட்ட வட்டார அளவிலான தயார்நிலையை வலுப்படுத்துவதன் தேவையையும் அவர்கள் வலியுறுத்தினர்.
பலதரப்பு மின்சார வர்த்தகம், ஆசியான் எரிசக்திக் கட்டமைப்பு (ASEAN Power Grid) உள்ளிட்ட அம்சங்களில் வட்டார ஒத்துழைப்பை மேம்படுத்தத் தங்கள் கடப்பாட்டை ஆசியான் அமைச்சர்கள் மறுவுறுதி செய்தனர்.
சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் மூத்த துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங், ஆசியானின் கூட்டு முயற்சிகளுக்குச் சிங்கப்பூரின் கடப்பாட்டை மறுவுறுதிப்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
மத்திய கிழக்கில் நிலவும் சூழல், எரிசக்தி மீள்திறனை மேம்படுத்துவதில் வட்டார ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுவதாக அவர் சொன்னார்.
ஆசியான் நாடுகளுடன் இணைந்து தயார்நிலையை வலுப்படுத்துதல், வட்டார எரிசக்தி ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் போன்றவற்றில் சிங்கப்பூர் தொடர்ந்து அணுக்கமாகப் பணியாற்றும் என்று திருவாட்டி கான் குறிப்பிட்டார்.

